ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மே 20 மற்றும் 22 ஆகிய திகதிகளில் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களுக்கு உத்தியோகபூர்வ பயணம் மேற்கொள்ள உள்ளார் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்தப் பயணத்தின் போது, ஜனாதிபதி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டங்கள் மற்றும் அபிவிருத்தி தொடர்பான நிகழ்வுகள் உள்ளிட்ட உத்தியோகபூர்வ நிகழ்ச்சிகளில் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கமைய மே 20 அன்று, ஜனாதிபதி ,மட்டக்களப்பு பழைய மாவட்ட செயலக அரங்கில் நடைபெறும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் கலந்துகொள்வார் எனவும் அதனைத் தொடர்ந்து, மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் இடம்பெறும் போதைப்பொருள் பயன்பாட்டை ஒழிப்பதை நோக்கமாகக் கொண்ட “ரட்டம எக்கட்ட” தேசிய நிகழ்ச்சியில் பங்கேற்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் மே 22 அன்று, ஜனாதிபதி நிந்தாவூர் கலாசார மத்திய நிலையத்திற்கு அடிக்கல் நாட்டவும், அம்பாறை நகரில் புதிய வணிக வளாகத்தின் கட்டுமானப் பணிகளைத் தொடங்கி வைக்கவும் உள்ளார் என குறிப்பிடப்பட்டுள்ளது.
மாவட்ட செயலக அரங்கில் நடைபெறும் அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் கலந்துகொள்வதன் மூலம் அவர் தனது பயணத்தை நிறைவு செய்வார் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.








