தமிழ் மக்களின் உரிமைகளுக்காக போராடிய தமிழீழ விடுதலைப் புலிகள் மற்றும் (LTTE) இலங்கை அரசுக்கு இடையிலான 30 ஆண்டுகளுக்கும் மேலான ஆயுதப் போராட்டம் மே 18 அன்று 2009 அன்று முடிவுக்குக் கொண்டு வரப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

அந்த வகையில் இன்றுடன் யுத்த முடிவு 17 வருடங்களை கடந்துள்ளது.

யுத்தத்தின் இறுதி காலப்பகுதிகளில் முள்ளிவாய்க்கால் பகுதிகளில் தமிழ் மக்கள் கொத்து கொத்தாக கொல்லப்பட்ட அதேவேளை பல்வேறு சந்தர்ப்பங்களில் தமிழ் மக்கள் இலக்கு வைக்கப்பட்டனர். இதனால் இந்த யுத்தத்தை தமிழ் மக்கள் தமிழின அழிப்பு அல்லது தமிழன படுகொலை என அழைக்கின்றனர்.

இதேவேளை நாட்டில் பிளவை ஏற்படுத்த முயன்ற தரப்பை அழித்ததாக கூறி அரசாங்க தரப்பு இராணுவ வெற்றி நாளாக இதனை முன்னெடுக்கிறது.

இன்று வடக்கு, கிழக்கு, கொழும்பு, மலையகம் உள்ளிட்ட பகுதிகளில் யுத்தத்தில் உயிரிழந்த பொது மக்கள் மற்றும் போராளிகளுக்காக நினைவேந்தல் நிகழ்வுகளை முன்னெடுத்து வருகின்றனர்.

குறிப்பாக முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் இன்று காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சமூக செயற்பாட்டாளர்கள், அரசியல் பிரதிநிதிகள் அனைவரும் தமது உறவுகளுக்கு பொது சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

புலம்பெயர் தமிழர்கள் வாழும் லண்டன், கனடா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளிலும் தமிழ் நாட்டிலும் இன்று நினைவேந்தல் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இதேநேரம் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் தலைமையில் பத்தரமுல்லையில் உள்ள ரணவிரு நினைவிடத்தில் நாளை (19) தேசிய வெற்றி நினைவு விழா நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆண்டுதோறும் நினைவுகூரும் பாரம்பரியத்தைத் தொடரும் வகையில் இந்த நிகழ்வு நடைபெறுவதாக ரணவிரு சேவா அதிகாரசபை அறிவித்துள்ளது.

முதன்முறையாக, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த வீரமரணம் அடைந்த போர் வீரர்களின் குடும்பங்கள் இந்த விழாவில் கலந்துகொள்ளும் என ரணவிரு சேவா அதிகாரசபை தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here