அனைவருக்கும் ஆங்கிலம் எனும் திட்டத்தை அடுத்த தசாப்தத்திற்குள் நடைமுறைப்படுத்துவதன் மூலம் ஆங்கில மொழிப் புலமை ஒவ்வொரு குழந்தைக்கும் கிடைக்கச் செய்யும் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்துள்ளார்.
தான் கல்வி அமைச்சராக இருந்த போது வெள்ளை அறிக்கை மூலம் ஆங்கிலக் கல்வியை அறிமுகப்படுத்தும் தாம் முன்வைத்த யோசனைக்கு ஜே.வி.பி எதிர்ப்பு தெரிவித்திருந்ததை ஜனாதிபதி நினைவு கூர்ந்தார்.
இந்த வேலைத்திட்டம் அன்றே நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தால் இன்று ஆங்கில மொழிப் பிரச்சினையை நாடு எதிர்கொண்டிருக்காது என அவர் வாதிட்டார்.
மல்வானை மக்களுடனான சந்திப்பின் பின்னர், ஆங்கில மொழிப் புலமையுடன் போராடும் இளைஞர்களுக்கு அரசாங்கம் என்ன செய்ய முடியும் என வினவிய இளைஞரொருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே ஜனாதிபதி விக்ரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இசட் தலைமுறைக்கு ஒளிமயமான எதிர்காலம் குறித்த தனது பார்வையை கோடிட்டுக் காட்டிய ஜனாதிபதி, தொலைநோக்குப் பார்வையில்லாத, போலித் திட்டங்களை மாத்திரம் கொண்ட சஜித் மற்றும் அனுரவின் அரசியல் திட்டங்களால் இளைஞர்கள் தவறாக வழிநடத்தப்பட வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார்.







