77 ஆவது சுதந்திர தின கொண்டாட்டத்தை முன்னிட்டு, அனைத்து அரச நிறுவனங்கள் தொடர்பாகவும் கடந்த மாதம் 10 ஆம் திகதி பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் வெளியிடப்பட்ட சுற்றறிக்கை திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
இந்த மாதம் முதலாம் திகதி முதல் 7 ஆம் திகதி வரை அனைத்து அரச நிறுவனங்களிலும் தேசியக் கொடியை ஏற்றுமாறு அந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இன்றும் நாளையும் அனைத்து அரச நிறுவனங்களையும் மின் விளக்குகளால் அலங்கரிக்க நடவடிக்கை எடுக்குமாறும் அறிவிக்கப்பட்டது.
எனினும் பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு இன்று அரச நிறுவனங்களின் மின் விளக்குகளால் அலங்கரிக்கும் செயற்பாட்டை இரத்துச் செய்யத் தீர்மானித்துள்ளதாக அறிவித்துள்ளது.
மின்சார பாதுகாப்பு மற்றும் மின் அலங்காரத்திற்கான செலவைக் கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் எட்டப்பட்டதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
சுதந்திர தினத்தை முன்னிட்டு சிறைச்சாலை கைதிகளைப் பார்வையிடுவதற்கான சிறப்பு வாய்ப்பை வழங்கச் சிறைச்சாலைகள் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
கைதிகளின் உறவினர்களால் கொண்டுவரப்படும் உணவு மற்றும் சுகாதாரப் பொருட்களை நாளை ஒரு கைதிக்கு போதுமான அளவில் வழங்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்த பார்வையாளர்களுக்குச் சுகாதார வழிகாட்டுதல்களின்படி நாட்டில் உள்ள அனைத்து சிறைச்சாலைகளையும் சுற்றிப் பார்வையிடச் சந்தர்ப்பம் வழங்கப்படும் என்றும் சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
77 ஆவது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட முழு இரவு பரித்ரான தர்ம பிரசங்கம் நேற்று இரவு சுதந்திர சதுக்கத்தில் நடைபெற்றது.
இதற்குப் பிரதமர் ஹரிணி அமரசூரிய தலைமை தாங்கினார்.
சுதந்திர தின கொண்டாட்டங்களுடன் இணைந்து சிறப்பு பாதுகாப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளதாகப் போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்பு பிரிவின் பிரதிப் பொலிஸ் மா அதிபர் இந்திக ஹபுகொட தெரிவித்தார்.







