அரச மருத்துவமனைகளில் தட்டுப்பாடு இல்லாத மருந்து வழங்கல் உறுதிப்படுத்தப்படும் என சுகாதார அமைச்சர் டாக்டர் நளிந்த ஜெயதிஸ்ஸ உறுதி அளித்துள்ளார்.
இலங்கையில் ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் (Marc-André Franche) திரு. மார்க்-ஆண்ட்ரே ஃபிரான்ச்சேவுடன் சமீபத்தில் நடைபெற்ற சந்திப்பின் போது அமைச்சர் இதனை தெரிவித்தார்.
இந்த சந்திப்பு சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சில் நடைபெற்றது.
இந்த சந்திப்பின் போது, நாட்டின் சுகாதார சேவை மற்றும் ஊடகத் துறையின் தற்போதைய நிலை, அத்துடன் நாட்டின் சுகாதார மற்றும் ஊடகத் துறைகளின் எதிர்கால வளர்ச்சிக்கு ஐக்கிய நாடுகள் சபை வழங்கும் ஆதரவு மற்றும் மானியங்கள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டது.
மேலும் நாட்டின் அரசு மருத்துவமனைகளில் எதிர்வரும் ஆண்டில் (2026) தொடர்ச்சியான மருந்து விநியோகத்தை பராமரிக்க தேவையான அனைத்து திட்டங்களும் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், அரசு மருத்துவமனைகளால் பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கப்படும் மருந்துகள் உயர் தரமானவை என்றும், மருந்துகளை கொள்வனவு செய்வதில் இருந்து மருந்துகளை வழங்குவது வரையிலான செயல்முறை தற்போது மிகவும் வெளிப்படை தன்மையுடன் மேற்கொள்ளப்படுவதாகவும் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்தார்.
சுகாதாரத் துறையில் எழுந்துள்ள சிக்கல் நிலைமை இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது என்றும் எத்தகைய தடைகள் மற்றும் சவால்கள் எழுந்தாலும், இந்த நாட்டு மக்களுக்கு தரமான மற்றும் சிறந்த சுகாதார சேவைகளை வழங்க பாடுபடுவேன் என்றும் அமைச்சர் திரு. மார்க்-ஆண்ட்ரே ஃபிராங்கிடம் கூறியுள்ளார்.
மேலும் ஐக்கிய நாடுகள் சபையுடன் இணைந்து பணியாற்றுவது இலங்கைக்கு ஒரு பெரிய சாதனை என்று அமைச்சர் கூறினார்.
நிகழ்வில் பேசிய இலங்கையில் உள்ள ஐ.நா. வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க்-ஆண்ட்ரே ஃபிராங்க், நீண்ட காலமாக நாட்டின் அரசாங்கங்களுடனும் மக்களுடனும் மேற்கொண்டு வரும் நல்லுறவை வலுப்படுத்துவதன் மூலம் மேலும் பணியாற்றுவேன் என்று கூறினார்.
கடந்த தேர்தலில் வழங்கப்பட்ட மக்கள் ஆதரவுடன், நாட்டில் பொதுமக்களின் எதிர்பார்ப்புகளும் உயர்ந்த மட்டத்தில் இருப்பதால், வரவிருக்கும் காலம் சவாலானதாக இருக்கும் என்றும், வதிவிட ஒருங்கிணைப்பாளர் சுகாதார மற்றும் ஊடக அமைச்சரிடம் சுட்டிக்காட்டினார்.
நாட்டில் நிலையான அமைதியை மேம்படுத்துவதற்கான புதிய அரசாங்கத்தின் முயற்சிக்கு ஐக்கிய நாடுகள் சபை முழு ஆதரவையும் வழங்கும் என்றும் அவர் கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் ,
தற்போதைய அரசாங்கம் இலவச சுகாதார சேவைக்காக அதிக அளவு பணத்தை ஒதுக்கியுள்ளது என்றும், வரும் காலத்தில் நாட்டில் சுகாதாரப் பராமரிப்பு முறையில் ஒரு மாற்றத்தை எதிர்பார்க்கிறது என்றும், அந்த மாற்றத்தில் ஒரு நீண்டகால நண்பராக தன்னால் முடிந்த அதிகபட்ச ஆதரவை தொடர்ந்து வழங்குவேன் என்றும் அமைச்சரிடம் மேலும் வலியுறுத்தினார்.
இந்தக் கூட்டத்தில் சுகாதார மற்றும் ஊடக அமைச்சின் செயலாளர், சிறப்பு மருத்துவர் டாக்டர் அனில் ஜாசிங்க உள்ளிட்ட குழுவினர் கலந்து கொண்டனர்.








