சிறுவர்களின் ஆரோக்கியத்திற்கு ஆபத்தான பிளாஸ்டிக் சார்ந்த பொருட்கள் சந்தையில் அதிக அளவில் விற்பனை செய்யப்படுவதை தடுக்கும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, புதிய நிபுணர் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்தார்.
இன்று (ஜூலை 03) கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“சுடுநீரைத் தீவிரமாக பாதிக்கக்கூடிய பிளாஸ்டிக் பாட்டல்களில் ஊற்றுகிறார்கள். இந்தப் பொருட்களில் புற்றுநோய் ஏற்படுத்தும் காரணிகள் உள்ளன என்பதற்கான ஆதாரங்களை உலகம் கவனிக்கத் தொடங்கியுள்ளது. நாங்கள் மேற்கொண்ட சோதனைகளிலும் பல ஆபத்தான நிலைகள் கண்டறியப்பட்டுள்ளன.”
இதைத் தொடர்ந்து, அமைச்சு நிபுணர்களைக் கொண்ட குழுவை நியமித்து, சந்தையில் உள்ள பிளாஸ்டிக் பொருட்கள் குறித்து முழுமையான ஆய்வு அறிக்கையை இரண்டு மாதங்களுக்குள் சமர்ப்பிக்கத் திட்டமிட்டுள்ளது. இந்த அறிக்கையின் அடிப்படையில், சிறுவர்களின் பாதுகாப்பிற்காக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அமைச்சர் உறுதியளித்தார்.
இறக்குமதியாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்களுடன் கலந்துரையாடல்களும் நடத்தப்படும் என்றும், அவற்றின் விளைவாக இந்த ஆபத்தான பொருட்களின் உற்பத்தி மற்றும் விநியோகத்துக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.








