ஜனநாயகத்தின் கேந்திர நிலையம் பாராளுமன்றம் எனவும் தற்பொழுது உலகில் காணப்படும் மிகவும் பொருத்தமான மற்றும் வெற்றிகரமான ஜனநாயக முறைமை பாராளுமன்ற முறைமையில் கட்டியெழுப்பப்பட்டுள்ளதாகவும் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
ஒரு நாட்டில் பாராளுமன்றம் இருப்பதன் தேவையை குறிப்பிட்ட சபாநாயகர் மாணவர் பாராளுமன்றத்தின் ஊடாக பாடசாலைகளை விருத்தி செய்யும் விதத்தை சுட்டிக்காட்டியுள்ளார்.
அம்பலாங்கொட தர்மாஷோக வித்தியாலயத்தின் மாணவர் பாராளுமன்ற ஆரம்ப நிகழ்வில் உரையாற்றும் போதே சபாநாயகர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அம்பலாங்கொட தர்மாஷோக வித்தியாலயத்தின் மாணவ மாணவிகளுக்கு பாராளுமன்ற முறைமை தொடர்பான பிரயோக ரீதியான அனுவபங்களை வழங்கும் நோக்கில் இலங்கை பாராளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களத்துடன் இணைத்து இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இங்கு பாராளுமன்ற செயற்பாடுகள் மற்றும் அதன் வகிபாகம் குறித்து மாணவர்களுக்கு எடுத்துரைத்த பாராளுமன்றத்தின் செயலர் நாயகம் குஷானி ரோஹணதீர, பாராளுமன்றத்தின் செயற்பாடுகள் குறித்து முழுமையாக விளக்கமளித்திருந்தார்.
அத்துடன், இங்கு உரையாற்றிய பாராளுமன்றத்தின் உதவிச் செயலாளர் நாயகம் ஹன்ஸ அபேரத்ன, பாடசாலையில் மாணவர் பாராளுமன்றங்கள் சரியான பாடத்திட்டங்களுடன் செயற்படுவதன் முக்கியத்துவத்தையும் அது பாடசாலையின் அபிவிருத்தியில் எவ்வாறு தாக்கம் செலுத்துகின்றது என்பதையும் வலியுறுத்தியுள்ளார்.
அதற்கமைய, இதன்போது அம்பலாங்கொட தர்மாஷோக வித்தியாலயத்தின் மாணவர் பாராளுமன்றத்தின் ஆரம்ப நிகழ்வை ஆரம்பிக்கும் வகையில் சபாநாயகர் தெரிவு இடம்பெற்றிருந்தது.







