2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நேற்றைய தினம் நாடாளுமன்றத்தில் நடைப்பெற்றது.
இதில் 45 மேலதிக வாக்குகளினால் வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு நிறைவேற்றப்பட்டுள்ளது.
நிதி அமைச்சரும் ஜனாதிபதியுமான ரணில் விக்ரமசிங்கவினால் கடந்த 13 ஆம் திகதி அடுத்த ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் முன்வைக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து 14 ஆம் திகதி முதல் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் 21 ஆம் திகதி வரை இடம்பெற்றது.
இதன் இறுதிக்கட்டமாக நேற்று மாலை 6 மணிக்கு இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நடைபெற்றது.
இவ் வாக்கெடுப்பில் இரண்டாம் வாசிப்புக்கு ஆதரவாக 122 வாக்குகளும் எதிராக 77 வாக்குகளும் கிடைத்திருந்தது.
மேலும், இன்றிலிருந்து 19 தினங்களுக்கு மூன்றாம் வாசிப்பு மீதான விவாதம் அல்லது குழுநிலை விவாதம் நடைபெறவுள்ளதுடன் 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு எதிர்வரும் டிசம்பர் மாதம் 13ஆம் திகதி நாடாளுமன்றத்தில் நடைபெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.