ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து கடந்த பெப்ரவரி 28 ஆம் திகதி ஆரம்பித்த தாக்குதல் ஆறு வாரங்களாக தொடர்ந்த நிலையில் கடந்த 7 ஆம் திகதி தற்காலிகமாக யுத்த நிறுத்தம் செய்வதாக அறிவிக்கப்பட்டது.
இதற்கிடையே போர் நிறுத்தத்திற்கான மத்தியஸ்தம் செய்வதற்கு பாகிஸ்தான் முன்வந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து அமெரிக்காவுடன் அமைதி பேச்சு வார்த்தை நடத்துவதற்காக ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகம்மட் பாகர் காலிஃ தலைமையிலான குழுவினர் பாகிஸ்தானுக்கு விரைந்துள்ளனர்.
இந்த பேச்சுவார்த்தை குறித்து ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவித்த காலிஃ அமெரிக்கர்களுடனான அமைதி பேச்சுவார்த்தை எப்போதும் தோல்வியிலும் வாக்குறுதி விதி மீறல்களிலும் முடிவடைகிறது.,
அமைதி பேச்சுவார்த்தைக்கு இடையே அவர்கள் இரண்டு முறை எங்கள் மீது தாக்குதல் நடத்தினார்கள் எங்களுக்கு நல்ல எண்ணம் உள்ளது. ஆனால் நம்பிக்கை இல்லை என தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் விரைந்துள்ள ஈரான் குழுவில் பாதுகாப்பு, அரசியல், இராணுவம், பொருளாதாரம் மற்றும் சட்ட வல்லுநர்கள் அடங்கியிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேநேரம் காலிஃ, தாம் பயணித்த விமானத்தில் ஈரானின் மீனாப் நகரில் பலியானவர்களின் புகைப்படங்கள் எடுத்து வரப்பட்டதாகவும் இந்த விமானத்தில் தனது நண்பர்கள் உள்ளனர் எனவும் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.







