அரசாங்கத்தின் வழிநடத்தலுக்கு அமைய தேர்தல் பணிகளுக்கான திகதிகளை நிர்ணயிக்கவில்லை. ஆணைக்குழுவுக்கு வழங்கப்பட்டுள்ள  அதிகாரத்துக்கு அமைவாகவே தீர்மானம் எடுக்கப்பட்டது. தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு போதுமான காலவகாசம் வழங்கப்படும் என்று தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சிமன்றத் தேர்தல் நடவடிக்கைகள் தொடர்பில் வினவிய போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

அரசியலமைப்பால் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள் மற்றும் தத்துவங்களுக்கு அமைவாகவே உள்ளூராட்சிமன்றத் தேர்தலுக்கான பணிகளை முன்னெடுத்துள்ளோம். தேர்தல் நடவடிக்கைகளில் அரசாங்கம் தலையிடவில்லை என்பதை தெளிவாக குறிப்பிட்டுக் கொள்கிறோம்.

உள்ளூராட்சிமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல்கள் மற்றும் வேட்புமனுக்கள் மீதான முறைப்பாடுகளை ஆராய்ந்ததன் பின்னரே  வாக்கெடுப்பு திகதி அறிவிக்கப்படும். தேர்தல் பிரசார நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு போதுமான காலவகாசம்  இல்லை என்று குறிப்பிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

வேட்புமனுத்தாக்கல் நிறைவு பெற்றதன் பின்னர் 35 நாட்களுக்கு குறையாமலும், 49 நாட்களுக்கு அதிகரிக்காமலும் என்ற வகையில் பிரச்சார நடவடிக்கைக்கு காலவகாசம் வழங்கப்படும்.இந்த காலவரையறை உள்ளடக்கியதாக வாக்கெடுப்பு திகதி அறிவிக்கப்படும்.

உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு அமைவாக உள்ளுராட்சிமன்றத் தேர்தலை விரைவாக நடத்த வேண்டும் என்பதில் உறுதியாகவுள்ளோம். எதிர்வரும் ஜுலை மாதம் 2 ஆம் திகதிக்கு முன்னர்  உள்ளூராட்சிமன்றங்கள் ஸ்தாபிக்கப்பட வேண்டும் என்று வர்த்தமானி பிரசுரத்தின் ஊடாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.

உள்ளூராட்சிமன்றத் தேர்தலை சிறந்த முறையில் நடத்தி முடிப்பதற்கு பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிறோம்.

மாகாணசபைத் தேர்தல் குறித்து பாராளுமன்றமே கொள்கை ரீதியில் ஒரு தீர்மானத்தை எடுக்க வேண்டும்.தேர்தல் முறைமையில் காணப்படும் சட்ட சிக்கலுக்கு தீர்வு கண்டு சாதகமான சூழலை ஏற்படுத்திக் கொடுத்தால் மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்கான பணிகளை முன்னெடுப்போம். மக்களின் ஜனநாயக வாக்குரிமையை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு எமக்கு உண்டு என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here