‘‘நாட்டில் தற்போது நடைமுறையிலிருக்கும் அரசியலமைப்பில் ஜனநாயகத்துக்கு எதிராக இருக்கும் பல்வேறு குறைபாடுகளை வெற்றிகொள்வதற்காக ஜனநாயகத்தையும் வெளிப்படைத் தன்மையையும் பாதுகாக்கும், ஒற்றுமையை விருத்திசெய்யும் புதிய அரசியலமைப்பொன்று உருவாக்கப்பட வேண்டும்.
விரைவில் இந்த அரசியலமைப்பை அரசாங்கம் திருத்தியமைக்குமென எதிர்பார்க்கிறோம். அதற்காக ஐந்து வருடங்கள் காத்திருக்க முடியாது. தற்போதே இந்த செயற்பாட்டுக்கு அரசாங்கம் அடித்தளத்தை இடவேண்டும்’’ என்று பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.
பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகைக்கும் சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவுக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று முன்தினம் (05) இடம்பெற்றது. அந்த சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே இதனைக் குறிப்பிட்டார்.

அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,
‘‘கிளீன் ஸ்ரீ லங்கா வேலைத்திட்டம்” என்பது வீதியிலுள்ள குப்பைகளை சுத்தம் செய்வது மாத்திரமல்ல. சமூகத்தில் பல்வேறு முரண்பாடுகள் இடம்பெற்றன. கடந்த 70 ஆண்டுகள் நாட்டில் சமூகத்தில் ஒழுக்கம், வெளிப்படைத் தன்மை, சமூக அபிவிருத்திக்கான மக்களின் எதிர்பார்ப்பு மிகவும் மழுங்கடிக்கப்பட்டிருந்தன. அதன் காரணமாக அவற்றை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்குமென நம்புகிறோம்.
அரசாங்கம் ஆட்சிக்கு வந்து குறுகிய காலமே ஆகிறது. எழுபது வருடங்களுக்கு முன்பிருந்து பலவீனமாக்கப்பட்ட ஜனநாயக பண்புகள், பொருளாதார நெருக்கடிக்கு காரணமாக இருந்த மோசடிகள் உள்ளிட்ட பொருத்தமற்ற செயற்பாடுகள் நாட்டின் தலைமைத்துவத்தில் இடம்பெற்றுள்ளன.
எனவே, இதனை ஒரே நேரத்தில் மாற்றியமைத்துவிட முடியாது என்பதை நாங்களும் புரிந்து வைத்துள்ளோம். இருந்தபோதும் இந்த விடயம் தொடர்பில் மிகவும் பலமாக செயற்பட வேண்டும். இந்த அரசாங்கத்துக்கு மக்கள் பெரும்பான்மை பலத்தை வழங்கியிருக்கிறார்கள். எனவே, அதனைப் பயன்படுத்தி தைரியத்துடன் பல்வேறு மாற்றங்களை இந்த அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும்.
உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் சம்பவத்தின் பின்னணியில் இருந்த தனிநபர்களுக்கு அப்பால் இந்த விவகாரத்தின் பின்னணியிலிருந்த உண்மையை வெளிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதே எங்களுக்கு அவசியமாகும். எந்த காரணத்துக்கான இந்த தாக்குதல் சம்பவங்களை மேற்கொண்டார்கள், எதற்காக இதனை செய்தார்கள், யாரின் ஒத்துழைப்புடன் இதனை செய்தார்கள் என்பது தொடர்பில் பரந்துபட்ட விசாரணைகளை முன்னெடுக்கப்பட வேண்டும்.
நாட்டில் பல்வேறு கொலைச் சம்பவங்கள், கடத்தல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. அவை தொடர்பில் முறையான விசாரணைகள் எதுவும் இதுவரையில் இடம்பெறவில்லை. அதன் காரணமாக உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் சம்பவம் உள்ளடங்களாக கொலைச் சம்பவங்கள், ஆட்கடத்தல், ஜனநாயக விரோத செயற்பாடுகள் தொடர்பில் விசாரணை செய்வதற்கு அவசியமாக பொறிமுறையை உடனடியாக தயாரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதேபோன்று, நீதித்துறை சுயாதீனமாக்கப்பட வேண்டும். இருந்தபோதும் அதற்கு அவசியமான மாற்றங்களை மேற்கொள்வதற்கு அரசியலமைப்பு ரீதியான மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். தற்போது நடைமுறையில் இருக்கும் அரசியலமைப்பில் ஜனநாயகத்துக்கு எதிராக இருக்கும் பல்வேறு குறைபாடுகளை வெற்றிக்கொள்வதற்காக ஜனநாயகத்தை பாதுகாக்கும் வெளிப்படைத் தன்மையை பாதுகாக்கும் ஒற்றுமையை விருத்திச் செய்யும் புதிய அரசியலமைப்பொன்று உருவாக்கப்பட வேண்டும்.
விரைவில் இந்த அரசியலமைப்பை அரசாங்கம் திருத்தியமைக்குமென எதிர்பார்க்கிறோம். அதற்காக ஐந்து வருடங்கள் காத்திருக்க முடியாது. தற்போதே இந்த செயற்பாட்டுக்கு அடித்தளத்தை இடவேண்டும்’’ என்றார்.








