அரிசி உற்பத்தியாளர்கள் மற்றும் விவசாய திணைக்கள அதிகாரிகளுடனான சந்திப்பின் போது, அரிசியின் கட்டுப்பாட்டு விலையில் மாற்றமில்லை என ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
விவசாயிகளுக்கு அதிக நன்மைகளை வழங்கும், ஒழுங்கமைக்கப்பட்ட விவசாயத் திட்டத்தை உருவாக்குவதற்கான நீண்டகால வேலைத்திட்டத்திற்கான திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த கலந்துரையாடல் நுகர்வோர் பொருட்களின் விலைகள் குறித்து கவனம் செலுத்தியது, இதில் பங்கேற்பாளர்கள் அரிசியின் விலையை கட்டுப்படுத்துவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தியுள்ளனர்.
கட்டுப்பாட்டு விலை நிர்ணயம் செய்யப்பட்டதன் பின்னர் விவசாயிகளிடம் இருந்து நெல்லை கொள்வனவு செய்துள்ளதாக அரிசி ஆலையாளர்களிடம் தெரிவித்த ஜனாதிபதி, இந்த நிலையில் அரிசியின் விலையை மாற்றுவது நியாயமற்றது என தாம் நம்புவதாகவும் தெரிவித்தார்.
நுகர்வோர் நியாயமான விலையில் அரிசியை கொள்வனவு செய்யும் வகையில் விவசாயிகளின் அரிசிக்கு நியாயமான விலை கிடைப்பதை உறுதி செய்யும் முறையான பொறிமுறையின் அவசியத்தையும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.
அரிசியின் விலை செயற்கையாக உயர்த்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட ஜனாதிபதி திஸாநாயக்க, கட்டுப்படுத்தப்பட்ட விலைகளை நீண்டகாலமாக அமுல்படுத்தாமையே இந்த விலை நிலையற்ற தன்மைக்கு காரணம் என குறிப்பிட்டார்.
இக்கலந்துரையாடலின் போது, பங்கு பதுக்கல்காரர்களின் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டதுடன், இந்தக் குழுவை பதிவு செய்யுமாறு விவசாய அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பணிப்புரை வழங்கினார்.








