அதிகவலு கதிரியக்க சக்தியுடன் கூடியதும் உயரிய தரத்துடன் கூடியதுமான கதிரியக்க சிகிச்சை உபகரணங்கள் விநியோக கருத்திட்டத்தின் 2ஆம் கட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போது வெகுசன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இதனை தெரிவித்தார்.
புற்றுநோய் சிகிச்சை சேவைகளுக்குப் பயன்படுத்தப்படும் 14 நேர்கோட்டு ஆர்முடுக்கி இயந்திரங்களை 02 கட்டங்களின் கீழ் விநியோகிப்பதற்கு 2013 ஆம் ஆண்டில் ஐக்கிய இராச்சியத்தின் Elekta கம்பனிக்கும், சுகாதார அமைச்சுக்கும் இடையில் ஒப்பந்தமொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த கருத்திட்டத்தின் I ஆம் கட்டத்தின் கீழ் தேசிய புற்றுநோய் நிறுவகத்தின் 04 நேர்கோட்டு ஆர்முடுக்கி இயந்திரங்களும், கண்டி தேசிய மருத்துவமனைக்கு 02 இயந்திரங்களும், காலி தேசிய மருத்துவமனைக்கு 01 இயந்திரமும், மட்டக்களப்பு போதனா மருத்துவமனைக்கு 01 இயந்திரமும், யாழ்ப்பாணம் தெல்லிப்பளை தள மருத்துவமனைக்கு 01 இயந்திரமுமாக மொத்தம் 09 இயந்திரங்கள் தற்போது தாபிக்கப்பட்டுள்ளன.
இலங்கை புற்றுநோய் நிபுணத்துவ மருத்துவ நிறுவகத்தால் சமர்ப்பிக்கப்படும் முன்மொழிவுகளைக் கருத்தில் கொண்டு இவை தாபிக்கப்படவுள்ளன.
இந்தக் கருத்திட்டத்தின் 2ஆம் கட்டத்தின் கீழ் இரத்தினபுரி, பதுளை, அம்பாந்தோட்டை, அநுராதபுரம் மற்றும் குருநாகல் உள்ளிட்ட 05 மருத்துவமனைகளுக்கு உயர் தொழிநுட்பத்துடன் கூடிய infinity நேர்கோட்டு ஆர்முடுக்கி இயந்திரங்களை நிறுவுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
குறித்த இயந்திரங்களை நிறுவுவதற்கு இயலுமாகும் வகையில் மருத்துவமனையில் நிலத்தடி அரணை நிர்மாணிப்பதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.







