இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் கடலூர் மாவட்டத்தில் இன்று காலை நடந்த ஒரு கொடூர விபத்தில் மூன்று பள்ளி மாணவர்கள் உயிரிழந்ததாகவும், மேலும் மூன்று பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

இச்சம்பவமானது, செம்மாங்குப்பம் என்ற பகுதியில் ரயில்வே கடவையை கடக்க முற்பட்ட பள்ளி வேன் மீது விரைவு ரயில் மோதியதால் நிகழ்ந்துள்ளது.

கடலூர் மாவட்டத்தின் கிருஷ்ணசுவாமி பள்ளியைச் சேர்ந்த மாணவர்களை ஏற்றிச் சென்ற வேன் மீது விலுப்புரத்திலிருந்து மயிலாடுதுறை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதாக பொலிஸாருக்கு தெரிய வந்துள்ளது. அதன்படி, ஆரம்ப விசாரணைகளில் அந்த ரயில்வே கடவையின் காவலர் தூக்கத்தில் இருந்ததால், இரும்புக் கதவு மூடப்படாத நிலையில் இருந்ததாக  தெரியவந்துள்ளது.

விபத்து நடந்த பின் அதிர்ஷ்டவசமாக, அப்பகுதியிலுள்ள கிராமவாசிகள் உடனடியாக மீட்பு பணியில் ஈடுபட்டு, காயமடைந்த குழந்தைகளை கடலூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றதாக கூறப்பட்டுகின்றது.

கடலூர் மாவட்ட ஆட்சியர் சிபி அதித்யா செந்தில் குமார் மற்றும் காவல் கண்காணிப்பாளர் ஜெயகுமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று மீட்பு நடவடிக்கைகளை கண்காணித்தனர்.

இந்தக் கடும் சோகத்தால் பதறிய கிராம மக்கள் சம்பவ இடத்திற்கு குவிந்து, தூங்கிக்கொண்டிருந்த ரயில்வே காவலரை தாக்க முயன்ற போது, பொலிஸார் அவர்களை தடுத்து நிறுத்தியதாகவும், பின்னர், கிராம மக்கள் ரயில்வே அதிகாரிகளிடம் பதிலளிக்கக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டதாகவும் தெரிய வந்துள்ளது.

இச்சம்பவத்தையடுத்து தற்போது அந்தப் பாதையில் ரயில்வே சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here