இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், இந்தியா மற்றும் இலங்கை இடையே பொருளாதார ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த அபரிமிதமான சாத்தியக்கூறுகள் இருப்பதாகவும், இருதரப்பு உறவுகளின் பூரணத்துவத்தை கருத்தில் கொண்டு இது பரஸ்பரம் பயனளிக்கும் என்றும் கூறியுள்ளார்.

நேற்று (29) கொழும்பில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் பிரதமர் தினேஷ் குணவர்தனவை சந்தித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டதாக பிரதமரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இலங்கையுடனான ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்துவதற்கான இந்தியாவின் விருப்பத்தை திரு. டோவல் வெளிப்படுத்தியதுடன், முன்னுரிமைப் பகுதிகள் குறித்து பிரதமரின் கருத்துக்களையும் கேட்டறிந்தார்.

எரிசக்தித் துறையை ஒத்துழைப்புக்கான முக்கியப் பகுதியாகக் கண்டறிந்த பிரதமர், பெரிய அளவிலான மற்றும் சிறிய அளவிலான மாற்று எரிசக்தித் திட்டங்களை ஆதரித்ததற்காக இந்தியாவுக்கு நன்றி தெரிவித்துள்ளார். மின்சார உற்பத்தி மற்றும் விநியோகத்தில் தனியார் துறையின் பங்களிப்பை எளிதாக்கும் வகையில் இலங்கை மின்சார சபை விதிமுறைகளை திருத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், இது சூரிய மற்றும் காற்றாலை மின் திட்டங்களில் இந்திய முதலீடுகளை அதிகரிக்க வழிவகுக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நீண்ட கால நோக்கில், இலங்கை தனது உள்நாட்டுத் தேவைகளை விட அதிக மின்சாரத்தை உற்பத்தி செய்து, அதிகப்படியான மின்சாரத்தை இந்தியாவுக்கு விற்று, கணிசமான நிதிப் பலன்களைப் பெற முடியும் என்று திரு. டோவல் பரிந்துரைத்தார்.

இலங்கையின் தேரவாதப் பொருளாதாரக் கொள்கையானது 25 நூற்றாண்டுகளுக்கு முன்னர் கௌதம புத்தரின் காலத்தில் இந்தியாவில் இருந்து வந்த பொருளாதார நடைமுறைகளில் வேரூன்றியுள்ளது என்றும், இந்த நடைமுறைகள் நவீன பொருளாதார வளர்ச்சிக்கு துணைபுரியலாம் என்றும் பிரதமர் விளக்கினார்.

ஆயுதப் படைகளின் உறுப்பினர்கள் மற்றும் பொது ஊழியர்களுக்கு அவர்களின் திறன் மற்றும் செயல்திறனை மேம்படுத்த பயிற்சி அளித்ததற்காக இந்தியாவுக்கு அவர் நன்றி தெரிவித்தார் என்று பிரதமரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த கலந்துரையாடலில் பிரதமரின் செயலாளர் அனுர திஸாநாயக்க, மேலதிக செயலாளர் ஹர்ஷ விஜேவர்தன மற்றும் ஆலோசகர் சுகேஸ்வர சேனாதிர ஆகியோரும் கலந்துகொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here