கடந்த (09.02.2025) மன்னார் வடக்கு கடற்பரப்பின் கிளிநொச்சி நீரியல் வளத்திணைக்கள எல்லைக்குள் கைது செய்யப்பட்ட 14 இந்திய மீனவர்களின் வழக்கு இன்றைய தினம் (2/19/2025) கிளிநொச்சி நீதிமன்றத்தில் நீதிமன்ற நீதவான் இஸ்மாத் ஜெமீல் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

முதலாவதாக ஒரு படகில் 11 மீனவர்கள் மீதான வழக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

குறித்த 11மீனவர்கள் மீது ஐந்து  குற்றங்கள் முன்வைக்கப்பட்டன.

  • அனுமதியின்றி இலங்கை கடற்பரப்பில் நுழைந்தமைக்காக 11 மீனவர்களுக்கும் 10ஆண்டுகள் ஒத்திவைக்கப்பட்ட 12மாத சிறைத்தண்டணை விதிக்கப்பட்டது.
  • இலங்கை கடல் எல்லையில் நுழைந்து மீன்பிடி உபகரணங்களைக்கொண்டு மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டமைக்காக 10 ஆண்டுகளுக்கு ஒத்திவைக்கப்பட்ட 6 மாத சிறைத்தண்டணை விதிக்கப்பட்டது.
  • இலங்கையில் தடைசெய்யப்பட்ட இழுவை மடி படகைப் பயன்படுத்தி மீன் பிடியில் ஈடுபட்டமைக்காக 11 மீனவர்களுக்கும் 50,000 ரூபா குற்றம் பணம் அறவிடப்பட்டது. இதனை செலுத்த தவறின் 6 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
  • குறித்த 11 மீனவர்களில் ஒருவர் உரிமையாளராகவும் படகு ஓட்டியாகவும் காணப்படுவதால் படகு ஓட்டிக்கான தண்டணையாக 6 மில்லியன் ரூபா  செலுத்துமாறும் தவறின் 6 மாத சிறைத்தண்டணையை  உரிமையாளராகவும் காணப்படுவதால் 6 மில்லியன் ரூபா  செலுத்துமாறும் தவறின் 6மாத சிறைத்தண்டணை எனவே ஒரு மீனவர் குறித்த தண்டணையை அனுபவிக்க நேர்ந்துள்ளது.
  • படகு உள்ளிட்ட மீனவர்களின் தொலைபேசி பணம் தவிர்ந்த அனைத்தும் அரசுடமையாக்கப்பட்டுள்ளது.

ஒரு படகில் 03 மீனவர்கள் மீதான வழக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. குறித்த 03மீனவர்கள் மீது மூன்று குற்றங்கள் முன்வைக்கப்பட்டன.

  • அனுமதியின்றி இலங்கை கடற்பரப்பில் ஊடுவி நுழைந்தமைக்காக 03 மீனவர்களுக்கும் 10 ஆண்டுகள் ஒத்திவைக்கப்பட்ட 12 மாத சிறைத்தண்டணை விதிக்கப்பட்டது.
  • இலங்கை கடல் எல்லையில் நுழைந்து மீன்பிடி உபகரணங்களைக்கொண்டு மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டமைக்காக 10 ஆண்டுகளுக்கு ஒத்திவைக்கப்பட்ட 6 மாத சிறைத்தண்டணை விதிக்கப்பட்டது.
  • இலங்கையில் தடைசெய்யப்பட்ட இழுவை மடி படகைப்பயன்படுத்தி மீன் பிடியில் ஈடுபட்டமை இதற்காக 03 மீனவர்களுக்கும் 50,000ரூபா குற்றம் பணம் அறவிடப்பட்டது. இதனை செலுத்த தவறின் 06 மாத சிறைத்தண்டனை.

குறித்த மூன்று இந்திய மீனவர்களில் ஒருவர் 2024ம் ஆண்டு மாச்மாதம் ஊர்காவற்துறை நீதிமன்றத்தினால் 5வருடத்திற்கு ஒத்திவைக்கப்பட்ட 06 மாத சிறைத்தண்டணை விதிக்கப்பட்டிருந்தது. அந்த காலப்பகுதியில் மீண்டும் ஒரு குற்றத்தை செய்தமையால் 18 மாத சிறைத்தண்டணை விதிக்கப்பட்டது.

[கிளிநொச்சி  நிருபர் – ஆனந்தன்]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here