சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு வெளி மாவட்டங்களுக்குப் பயணித்த பொது மக்கள் மீண்டும் தலைநகருக்குத் திரும்பும் வகையில் இன்று முதல் விசேட போக்குவரத்து திட்டத்தினை முன்னெடுப்பதற்குத் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.

எதிர்வரும் 21ஆம் திகதி வரை முன்னெடுக்கப்படவுள்ள இந்த விசேட போக்குவரத்து திட்டத்தின்படி, மேலதிகமாக 800 பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, பொது மக்களின் நலன் கருதி நாளை முதல் எதிர்வரும் 3 தினங்களுக்கு விசேட தொடருந்து சேவை முன்னெடுக்கப்படவுள்ளதாகத் தொடருந்து திணைக்களத்தின் பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

வெளிமாவட்டங்களுக்குச் சென்ற பயணிகள் மீண்டும் தலைநகருக்குத் திரும்பும் வகையில் 18, 19 மற்றும் 20ஆம் திகதிகளில் விசேட தொடருந்து சேவை முன்னெடுக்கப்படவுள்ளது.

வழமையான நடைமுறைக்கமைய முன்னெடுக்கப்படும் சாதாரண தொடருந்து சேவை, குறித்த தினங்களிலும் முன்னெடுக்கப்படும்.

புதுவருடத்தை முன்னிட்டு குறித்த சாதாரண தொடருந்து சேவைக்கு மேலதிகமாகவே இந்த விசேட தொடருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளன.

அத்துடன், சுற்றுலாப் பயணிகளுக்காக அறிமுகப்படுத்தப்பட்ட கெலிப்சோ தொடருந்தும் இந்த காலப்பகுதியில் முன்னெடுக்கப்படுகிறது.

கடந்த 15ஆம் திகதி நானுஓயா முதல் எல்ல வரை முன்னெடுக்கப்பட்ட கெலிப்சோ தொடருந்து வேவை ஊடாக 21 இலட்சம் ரூபாய் வருமானம் கிடைக்கப் பெற்றுள்ளது.

இதன்படி, பொது மக்களுக்குச் சிறந்த முறையில் சேவையினை வழங்குவதுடன், அரசாங்கத்திற்கு வருமானத்தினையும் ஈட்டிக் கொடுத்துள்ளதாகத் தொடருந்து திணைக்களத்தின் பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கடந்த 6 நாட்களில் அதிவேக நெடுஞ்சாலை ஊடாக 7,87,000 வாகனங்கள் பயணித்துள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.

இதன் மூலம் 273 மில்லியன் ரூபாய் வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் பராமரிப்பு மற்றும் செயல்பாட்டுப் பிரிவின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் ஆர்.ஏ.டி. கஹடபிட்டிய தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here