18 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் இன்ஸ்டாகிராமைப் பெருமளவில் பயன்படுத்தி வருவதால், அவர்கள் அபாயகரமான மற்றும் ஒழுக்கமற்ற உள்ளடக்கங்களைப் பார்ப்பதாக எழுந்த விமர்சனங்களின் பின்னணியில், மெட்டா நிறுவனம் புதிய பாதுகாப்பு நடைமுறையை அறிமுகப்படுத்தியுள்ளது.
இதன்படி, 18 வயதிற்குக் குறைவானவர்கள் இன்ஸ்டாகிராமில் பாலியல், போதைப்பொருள் அல்லது வன்முறை சார்ந்த காணொளிகளைப் பார்ப்பது தடைசெய்யப்படும். அவர்கள் பார்க்கக் கூடியது பாதுகாப்பான, கல்வி மற்றும் பொழுதுபோக்கு சார்ந்த உள்ளடக்கங்களாக மட்டுமே இருக்கும்.
மேலும், இந்தக் கட்டுப்பாடுகளை பெற்றோர்களின் அனுமதியின்றி மாற்ற முடியாது எனவும் மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.
திரைப்படங்களுக்கு உள்ள PG-13 வகை மதிப்பீட்டைப் போன்று, இன்ஸ்டாகிராமிலும் தற்போது “Limited Content” என்ற புதிய வசதி கொண்டு வரப்பட்டுள்ளது. இதன்மூலம் பெற்றோர்கள் தங்களின் குழந்தைகள் காணக்கூடிய உள்ளடக்கத்தை நிர்வகிக்க முடியும்.
சிறுவர்கள் தங்களை 18 வயதுக்கு மேற்பட்டோர் எனப் போலியாகக் குறிப்பிட்டாலும், அதனை தகவல் சரிபார்ப்பு தொழில்நுட்பத்தின் மூலம் கண்டறியும் திறன் இன்ஸ்டாகிராமில் சேர்க்கப்பட்டுள்ளது.
இந்த புதிய பாதுகாப்பு நடைமுறை தற்போது அமெரிக்கா, இங்கிலாந்து, அவுஸ்திரேலியா மற்றும் கனடா போன்ற நாடுகளில் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது.







