வாகன இறக்குமதிகள் மீது அரசாங்கம் புதிதாக விதித்துள்ள 50% மேலதிக வரியானது, வாகன விலைகளை குறைந்தபட்சம் 1.5 மில்லியன் வரை அதிகரித்து நுகர்வோரின் கொள்வனவு திறனை மேலும் மோசமாக்கும் என இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் (VIASL) எச்சரித்துள்ளது.

இறக்குமதி வரி குறித்து ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த சங்கத்தின் செய்தித் தொடர்பாளர் அரோஷ ரொட்ரிகோ இதனை குறிப்பிட்டார்.

வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்ட மேலதிக 50 வீத வரியானது, ஏற்கனவே உள்ள சுங்க வரிகள் மற்றும் சமீபத்திய அந்நிய செலாவணி விகித உயர்வுகளுக்கு மேலதிகமாக விதிக்கப்பட்டுள்ளது என அவர் சுட்டிக்காட்டினார்.

‘வாகனங்களின் விலைகள் எவராலும் தாங்க முடியாத விகிதத்தில் அதிகரித்து வருகின்றன. இந்த நிலையில் விதிக்கப்பட்டுள்ள மேலதிக வரியானது, வாகன இறக்குமதியாளர்களுக்கு சுமக்க முடியாததொன்றாக உள்ளது. பல வாகனங்களின் விலை 1.5 முதல் 2.5 மில்லியன் ரூபாய் வரை அதிகரிக்கும்,’ என அவர் மேலும் விளக்கினார்.

தனிப்பட்ட முறையில் இறக்குமதி செய்யப்பட்டாலும் விற்பனையகங்கள் மூலம் விற்கப்பட்டாலும், ஒவ்வொரு வாகனத்திற்குமான சுங்க வரி குறைந்த பட்சம் 1.5 மில்லியன் வரை அதிகரிக்கும்.

மே 15-ஆம் திகதிக்கு முன்னர் கடன் கடிதங்களைத் (Letters of Credit) தொடங்கியவர்களுக்குக் மேலதிக கட்டணத்திலிருந்து விலக்கு அளிக்கப்படும் என்றும், எனினும், டொலர் மற்றும் ஜப்பானிய யென்னின் மதிப்பு அதிகரிப்பால் அவர்களும் அதிக செலவுகளைச் சந்திக்க நேரிடும் என்றும் ரொட்ரிகோ குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here