ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60வது கூட்டத் தொடரில் இலங்கையின் மனித உரிமைகள் நிலைமை தொடர்பாக பிரித்தானியா சிறப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில், இலங்கையில் புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட பாரிய புதைகுழிகளை சர்வதேச தரநிலைகளுக்கு ஏற்ப விசாரணை செய்வது மிக அவசியம் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், தன்னிச்சையான தடுப்புக்காவல், காவலில் மரணங்கள், மனித உரிமை பாதுகாவலர்களுக்கு எதிரான அச்சுறுத்தல்கள், சிறுபான்மை சமூகங்களை குறிவைத்தல் ஆகியவற்றில் தொடர்ந்து கவலை வெளியிடப்பட்டுள்ளது.

பயங்கரவாத தடுப்புச் சட்டம் (PTA) ஒழிக்கப்படும் என்ற வாக்குறுதிகள் இருந்தபோதிலும், அது இன்னும் அடிப்படை சுதந்திரங்களை கட்டுப்படுத்தப் பயன்படுத்தப்படுவதைப் பற்றி ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளது.

காணாமல் போனவர்கள் மற்றும் இழப்பீடுகள் தொடர்பான உள்நாட்டு அமைப்புகளின் பணியை ஊக்குவிக்க வேண்டியதையும், எந்த நல்லிணக்கமும் பொறுப்புக்கூறலுடன், பாதிக்கப்பட்ட சமூகங்களின் பங்கேற்புடன், சர்வதேச தரங்களுக்கு ஏற்ப இருக்க வேண்டியது அவசியம் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதேவேளை, மோதல் தொடர்பான பாலியல் வன்முறைகள் குறித்து விசாரணைகளை முன்னுரிமை வழங்க வேண்டியதன் அவசியத்தையும் பிரித்தானியா வலியுறுத்தியுள்ளது.

இலங்கையுடன் இக்கருத்துகளில் ஆக்கபூர்வமாக இணைந்து பணியாற்ற பிரித்தானியா தயாராக உள்ளது எனவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here