இலங்கையில் ஒவ்வொரு நாளும் சுமார் 100 புதிய புற்றுநோயாளர்கள் கண்டறியப்படுவதாகவும், ஆண்டுதோறும் கிட்டத்தட்ட 35,000 பேர் புற்றுநோயால் பாதிக்கப்படுவதாகவும் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
புற்றுநோய் சிகிச்சை சுகாதாரத் துறையின் மீது பெரும் சுமையை ஏற்படுத்தி வருவதாகவும், நாட்டின் மொத்த மருந்து செலவில் கிட்டத்தட்ட 30 சதவீதம் புற்றுநோய் மருந்துகளுக்கே ஒதுக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.
மேலும், புற்றுநோய் மருந்துகளின் எண்ணிக்கை ஒப்பீட்டளவில் குறைவாக இருந்தாலும் அவற்றின் செலவுகள் மிக அதிகம் எனவும் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ குறிப்பிட்டார்.
இலங்கையர்களில் 30 முதல் 70 வயதுக்குட்பட்டவர்களுக்கிடையில் ஏற்படும் பெரும்பாலான மரணங்களுக்குத் தொற்றுநோயல்லாத நோய்களே (NCDs) காரணமாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இதனால் புற்றுநோய் மற்றும் பிற தொற்றாத நோய்கள் அதிகரித்து வரும் நிகழ்வுகளைத் தடுப்பதற்காக, ஆரம்பக்கால கண்டறிதல் மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்களில் கவனம் செலுத்துமாறு அவர் பொதுமக்களை வலியுறுத்தினார்.
அத்துடன், புற்றுநோய் மற்றும் பிற தொற்றாத நோய்களால் அதிகரித்து வரும் பாதிப்பை குறைக்கும் வகையில் தேவையான நடவடிக்கைகளை உடனடியாக முன்னெடுக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.







