சுகாதார மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சரும், இலங்கை – இந்திய பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் தலைவருமான அமைச்சர் (வைத்தியர்) நளிந்த ஜயதிஸ்ஸ தலைமையிலான இலங்கை பாராளுமன்றத் தூதுக் குழுவினர், இந்திய உயர்ஸ்தானிகரகத்தின் அழைப்பை ஏற்று ஆகஸ்ட் 26 முதல் 30 வரை இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளனர்.
இக்குழுவில் துணை அமைச்சர்கள், பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்டோர் இணைந்திருந்தனர். நிகழ்ச்சி நிரலின்படி, குழுவினர் லோக் சபா மற்றும் இரஜ்ஜ சபா விஜயம், பாராளுமன்ற நூலகம், ஊடக வகிபாகம், குழு முறைமை, உயர் கல்வி, சுகாதாரம், சிறப்புரிமைகள் மற்றும் நெறிமுறைகள் தொடர்பான கலந்துரையாடல்களில் பங்கேற்றனர். மேலும், சுகாதார சிறப்பு மையத்திற்கும் இந்திய வர்த்தக மற்றும் கைத்தொழில் சங்கங்களின் சம்மேளனத்திற்கும் விஜயம் செய்தனர்.
இந்திய லோக் சபா சபாநாயகர் ஓம் பிர்லாவுடனான சந்திப்பு விஜயத்தின் முக்கிய நிகழ்வாக அமைந்தது. இலங்கை–இந்தியா இருதரப்பு உறவுகள், குறிப்பாக பாராளுமன்றம், சுகாதாரம், ஊடகம் மற்றும் கல்வித் துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்தும் வகையில் இந்த சந்திப்பு அமையும் என இந்திய சபாநாயகர் குறிப்பிட்டார்.
இந்திய பாராளுமன்றத்தினால் வழங்கப்பட்ட சிறப்பான வரவேற்புக்கு அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ நன்றியைத் தெரிவித்ததோடு, இரு நாடுகளுக்கும் இடையிலான பாராளுமன்ற இராஜதந்திரத்தையும் மக்களிடையேயான உறவுகளையும் மேம்படுத்த இலங்கையின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினார்.
இந்திய லோக் சபா செயலகத்தில் விளக்கவுரையுடன், இலங்கைத் தூதுக் குழுவின் இந்த விஜயம் வெற்றிகரமாக நிறைவடைந்தது.








