இலங்கை குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணை இன்று (6) வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டுள்ளது.
“இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகள் மேம்படுத்தல்” எனும் தலைப்பில், இந்தப் பிரேரணை பிரிட்டன் தலைமையிலான இணை அனுசரணை நாடுகளால் முன்வைக்கப்பட்டது.
கடந்த மாதம் சமர்ப்பிக்கப்பட்ட ஆரம்ப வரைபில் பல திருத்தங்கள் செய்யப்பட்டு, அதன் இறுதி வடிவம் இன்று பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டது.
அதனை வாக்கெடுப்பின்றி நிறைவேற்றியதுடன், இலங்கை மீதான மனித உரிமைகள் உயர் ஆணையாளர் அலுவலகத்தின் அதிகாரம் நீடிக்கப்படும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த தீர்மானத்திற்கு, பிரதான 5 நாடுகளுடன் மேலும் 22 நாடுகள் இணை அனுசரணை வழங்கியுள்ளன.








