தங்காலையில் நேற்றைய தினம் (செப்டெம்பர் 23, 2025) இலங்கை வரலாற்றில் முதன்முறையாக தரைப்பகுதியில் அதிக அளவிலான போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்து காவல்துறை மா அதிபர் பிரியந்த வீரசூரிய நேற்று ஊடகங்களிடம் தெரிவித்தார்.
நேற்று தங்காலையில் முன்னெடுக்கப்பட்ட விசேட தேடுதலின் போது, மொத்தம் 635 கிலோகிராம் ஐஸ் மற்றும் ஹெரோயின் கைப்பற்றப்பட்டதாக அவர் கூறினார்.
இதுவரை மாத்தறையில் கைப்பற்றப்பட்ட 394 கிலோ கிராம் போதைப்பொருளே மிகப்பெரியதாக இருந்த நிலையில், தற்போதைய கைப்பற்றல் புதிய சாதனையாக அமைந்துள்ளது.
“போதைப்பொருள் விற்பனையாளர்களுக்கும், பின்னணியில் செயற்படுவோருக்கும் எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. எதிர்காலத்திலும் அவர்களுக்கு எந்தவிதமான ஆதரவோ, பாதுகாப்போ வழங்கப்படமாட்டாது,” என காவல்துறை மா அதிபர் உறுதியளித்தார்.
மேலும், இந்த வெற்றிகரமான சுற்றிவளைப்பில் பங்கேற்ற காவல்துறையினருக்கும், பயனுள்ள தகவல்களை வழங்கிய பொதுமக்களுக்கும் வெகுமதிகள் வழங்கப்படும் எனவும் அவர் அறிவித்தார்.







