அரசாங்க காணியின் ஒரு பகுதியை பயிர்செய்கைக்காக வழங்குவதற்காக 1.2 மில்லியன் ரூபாயை இலஞ்சமாக கோரி பெற்ற குற்றச்சாட்டின் பேரில், விவசாய ஆராய்ச்சி மற்றும் உற்பத்தி உதவியாளர் ஒருவர் நேற்று (16) இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டார்.
மஹவ பகுதியைச் சேர்ந்த ஒருவர் அளித்த முறைப்பாட்டைத் தொடர்ந்து இந்த கைது நடைபெற்றது.
விசாரணைகளில், சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்டு பயிரிடப்பட்ட 20 ஏக்கர் அரசாங்க காணியில் இருந்து 12 ஏக்கர் பகுதியை முறைப்பாட்டாளருக்கு வழங்கும் பொருட்டு, சந்தேகநபர் ஏக்கர் வரி செலுத்தப்பட்டதாக பற்றுச்சீட்டு வழங்கியிருந்தார்.
அத்துடன், தேவையான பணிகளை மேற்கொள்ள மொத்தம் ரூ. 3.5 மில்லியன் தொகையை கோரியிருந்த அவர், அதில் ரூ. 1 மில்லியனை பெற்றிருந்தார். மீதமுள்ள தொகையில் இருந்து ரூ. 1.2 மில்லியனை இலஞ்சமாக கோரி பெற்றபோது, இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவின் அதிகாரிகள் அவரை மடக்கி கைது செய்தனர்.
தியலும விவசாய சேவை மையத்தில் பணிபுரியும் இந்த அதிகாரி, நேற்று மதியம் 12.15 மணியளவில் தனமல்வில – வெல்லவாய பிரதான வீதியில் உள்ள எதிலிவெவ நகரிலுள்ள உணவகத்தில் கைது செய்யப்பட்டார்.
இலஞ்சம் தொடர்பான குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட அவர், வெல்லவாய பிரதான நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.








