கணேமுல்ல சஞ்சீவவின் கொலைக்குப் பிறகு தலைமறைவாக இருந்த இஷாரா செவ்வந்தி, நேபாளத்தில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட பின், பாதுகாப்பு அதிகாரிகளிடம் பல முக்கியமான தகவல்களை வெளிப்படுத்தியுள்ளார்.

அவர் தெரிவித்ததன்படி, கொலைக்குப் பிறகு இரண்டு மாதங்கள் மத்துகம மற்றும் தங்காலை பகுதிகளில் மறைந்து வாழ்ந்ததாகவும், பின்னர் ‘பத்மே’ என்பவரின் அறிவுறுத்தலின் பேரில் மித்தெனிய பகுதியில் தங்கியிருந்ததாகவும் கூறியுள்ளார்.

நேபாளத்தில் தங்கியிருந்தபோது, இந்தியாவின் பெங்களூருவிலிருந்து வந்ததாக கூறி ‘தமிழினி’ என்ற பெயரில் வாடகை வீட்டில் தங்கி இருந்ததும், மாதம் 6,000 நேபாள ரூபாய் செலுத்தியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இஷாராவை கைது செய்த இலங்கை மற்றும் நேபாள பொலிஸார் இணைந்த சிறப்பு நடவடிக்கையில், அவர் எந்த எதிர்ப்பையும் காட்டாமல் கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

விசாரணையில், கொலைக்குப் பிறகு அவர் ஜே.கே. பாயுடன் படகு மூலம் இந்தியாவுக்கு தப்பிச் சென்றதும், அங்கு இரண்டு வாரங்கள் தங்கியிருந்து, போலியான அடையாள அட்டை பெற்ற பின் நேபாளம் சென்றதும் தெரியவந்தது.

அவருடன் கம்பஹா பபா, நுகேகொடை பபி, ஜப்னா சுரேஷ், தக்‌ஷி ஆகியோரும் சேர்ந்து இருந்தனர். பத்மே கைது செய்யப்பட்ட பிறகு, குழுவினர் வேறு இடங்களில் தங்கியிருந்ததாகவும் பொலிஸார் கண்டறிந்துள்ளனர்.

இஷாராவிடமிருந்து கிடைத்த தகவல்களின் அடிப்படையில் பல்வேறு பகுதிகளில் தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. தற்போது அவர் 72 மணி நேரம் தடுத்து வைத்து விசாரணை செய்யப்படுகிறார் என்று பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here