புற்றுநோய் மற்றும் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் புகைப்படங்களைப் பயன்படுத்தி பணம் வசூலிக்கும் மோசடியில் ஈடுபட்ட மூவர் நேற்று (16) கைது செய்யப்பட்டனர்.

முதற்கட்ட விசாரணைகளில், சந்தேகநபர்கள் பேஸ்புக் வழியாக போலி கணக்குகள் உருவாக்கி, நோய்வாய்ப்பட்ட குழந்தைகளுக்காக நிதி சேகரிப்பதாகக் கூறி மோசடி செய்திருப்பது தெரியவந்துள்ளது. அந்தக் கணக்குகளில் பதிவிடப்பட்ட புகைப்படங்கள் மற்றும் கதைகளை நம்பிய மக்கள் உணர்ச்சிவசப்பட்டு பணம் வழங்கியுள்ளனர்.

ஆனால், அந்தக் குழந்தைகளின் உறவினர்கள் பேஸ்புக்கில் வெளியான பதிவுகளைப் பார்த்து, தங்கள் குழந்தைகளுக்கு எந்த உதவியும் தேவையில்லை எனத் தெரிவித்ததையடுத்து, இது ஒரு மோசடி என வெளிச்சமிட்டது.

நிதி வழங்கிய ஒருவர் முறைப்பாடு செய்ததையடுத்து, குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் இணைய கண்காணிப்பு மற்றும் புலனாய்வு பிரிவு பேஸ்புக் நிறுவனத்திடமிருந்து பெறப்பட்ட தொழில்நுட்ப தகவல்களின் அடிப்படையில் விசாரணை நடத்தியது. அதன் மூலம் ஆறு போலி கணக்குகள் கண்டறியப்பட்டன.

இக்கணக்குகள் மூலம் நீண்டகாலமாக புற்றுநோய் மற்றும் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை இலக்காகக் கொண்டு நிதி மோசடிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது.

பின்னர், இந்த மோசடியில் ஈடுபட்ட மூவர் ஓபநாயக்க மற்றும் ரக்வானை பகுதிகளில் கைது செய்யப்பட்டனர்.

விசாரணைகளில், பல்வேறு சமூக வலைத்தள பதிவுகளில் பிரார்த்தனை அல்லது உதவி கோரிக்கை போன்ற தகவல்களைப் பயன்படுத்தி, தங்களது வங்கிக் கணக்கு எண்களை இணைத்து பணம் சேகரித்திருப்பதும், அந்தப் பணத்தை போதைப்பொருள் வாங்க பயன்படுத்தியதும் தெரியவந்தது.

கைது செய்யப்பட்ட மூவர் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, எதிர்வரும் 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here