குறைந்த வருமானத்துடன் அரசியலுக்கு வரும் உறுப்பினர்கள் ஊழல் மூலம் பணம் சம்பாதிக்கும் கலாச்சாரத்தை முற்றிலுமாக மாற்றுவோம் என விவசாயம் மற்றும் கால்நடைத் துறை பிரதியமைச்சர் நாமல் கருணாரத்ன எச்சரித்துள்ளார்.

பொல்பிதிகம பிரதேச சபையின் புதிய உறுப்பினர்கள் பதவியேற்பு நிகழ்வில் நேற்று திங்கட்கிழமை (02.06.2025) கலந்து கொண்டு உரையாற்றிய அவர் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.

தொடர்ந்தும் அங்கு உரையாற்றிய பிரதியமைச்சர், “பொல்பித்திகம பிரதேச சபையிலிருந்து மட்டுமல்ல, ஒவ்வொரு நகர சபை மற்றும் பிரதேச சபையிலிருந்தும், ஒப்பிடமுடியாத ஒரு முன்மாதிரியை நாங்கள் அமைத்து வருகிறோம். அதற்காக நாங்கள் ஒரு திட்டத்தை  உருவாக்கி வருகிறோம். அந்த திட்டத்தை உருவாக்கும் திறன் எங்களிடம் உள்ளது.

பிரதேச சபையின் உறுப்பினர் ஒருவர் 21,000 ரூபாய் உதவித்தொகையைப் பெறுகிறார். பிரதேச சபை ஒன்றின் தலைவர் 25,000 ரூபாய் பெறுகிறார். இதில் சபைக்கு சபை சிறிய வேறுபாடுகள் உள்ளன.

சில இடங்களில் ரூ. 25,000 உதவித்தொகையைப் பெற்ற சபைத் தலைவர்கள் 30 தொடக்கம் 40 ஏக்கர் நிலத்தை எப்படி வாங்க முடியும்? அவர்கள் எப்படி இரண்டு மற்றும் மூன்று மாடி வீடுகளைக் கட்ட முடியும்? நகரத்திற்கு அருகில் நூற்றுக்கணக்கான பேர்ச்சஸ் நிலத்தை எப்படி வாங்க முடியும்? அந்த கலாச்சாரத்தை மாற்ற நாங்கள் வந்துள்ளோம். நிச்சயமாக அதை மாற்றுவோம்.” என பிரதியமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here