மாலைத்தீவில் உள்ள வாவூ அட்டோல் கடல் பகுதி அருகே காணாமல் போன 5 இத்தாலிய ஆய்வாளர்களை தேடும் அபாயகரமான நடவடிக்கையின் போது, மாலைத்தீவைச் சேர்ந்த மீட்பு பணியாளராக ஸ்டாஃப் சர்ஜென்ட் முகமட் மஹ்தீ உயிரிழந்துள்ளார் என அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
மாலைத்தீவில் ஸ்கூபா டைவிங் பயணத்தின் போது காணாமல் போன ஐந்து இத்தாலிய நீர்மூழ்கிகளின்(நீருக்கடியில் ஆய்வு செய்வோர்) உடல்களை மீட்பதற்கான அதிக ஆபத்துள்ள நடவடிக்கையில் பங்கேற்றநிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.
தேடுதல் நடவடிக்கையின் போது முகமட் மஹ்தீ மயங்கி விழுந்து ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தலைநகர் மாலேயில் இருந்து சுமார் 100 கிமீ தெற்கே உள்ள வாவு அட்டோல் என்ற இடத்தில் கடந்த வியாழன் அன்று 50 மீட்டர் ஆழத்தில் உள்ள நீருக்கடியில் உள்ள குகைகளை ஆராயும் நோக்கில் ஐந்து இத்தாலியர்கள் தண்ணீருக்குள் இறங்கியதாக கூறப்படுகிறது. அவர்கள் மீண்டு வராததான் காணாமல் போனதாக கருதப்பட்டது.
இந்த சம்பவம் மாலைத்தீவு வரலாற்றில் மிக மோசமான ஒற்றை ஸ்கூபா டைவிங் விபத்தாக இருக்கலாம் என அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர். இதுவரை, நீருக்கடியில் சுமார் 60 மீட்டர் ஆழத்தில் அமைந்துள்ள ஒரு குகையிலிருந்து ஒரு சடலம் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று சனிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட மீட்பு நடவடிக்கையின் போது எட்டு மீட்பு வீரர்கள் நீருக்குள் இறங்கியுள்ளனர். மீண்டும் மேற்பரப்பிற்கு வந்தபோது, மஹ்தீயைக் காணவில்லை என்பதை உணர்ந்த குழுவினர், உடனடியாக மீண்டும் நீருக்குள் இறங்கி, பின்னர் அவரை சுயநினைவின்றி காணப்பட்ட நிலையில் மீட்டுள்ளனர்.
கடல் கொந்தளிப்பு மற்றும் சீரற்ற வானிலை காரணமாக மீட்பு நடவடிக்கை மிகவும் ஆபத்தானதாக காணப்படுவதாக மாலைத்தீவு இராணுவம் விவரித்துள்ளது.







