சீனா-நேபாள எல்லை பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக சீனாவின் சி சேங் Xizang தன்னாட்சி பிராந்தியத்தில் உள்ள ஜியிராங் Gyirong பகுதியில் சிலர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் பலர் காணாமல் போயுள்ளனர்.
நேற்று (26) காலை 10:30 மணியளவில் இந்த அனர்த்தம் சம்பவித்துள்ளது. நிலச்சரிவால் ஏற்பட்ட சேதங்களை தடுப்பதற்கும் மீட்பு பணிகளை மேற்கொள்வதற்கும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உடனடியாக உத்தரவுகளை வழங்குமாறு சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் அறிவுறுத்தியுள்ளார்.
மக்களின் உயிர் மற்றும் சொத்துக்களை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் மற்றும் மீட்பு பணிகள் விஞ்ஞான ரீதியாக ஒழுங்கமைக்கப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். அத்துடன் கண்காணிப்பு, முன்னெச்சரிக்கை மற்றும் ஆபத்துக்களை நீக்கும் பணிகளை உறுதிப்படுத்துமாறும் அவர் கூறியுள்ளார்.
இதேவேளை மக்களை மீட்பது, காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிப்பது,இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியமர்த்துவது ஆகியவற்றுக்கு முழு முயற்சிகளையும் எடுக்குமாறு சீன பிரதமர் லீ சியாங் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
அத்துடன் அனர்த்த தடுப்பு மற்றும் பதிலளிப்பு நடவடிக்கைகளை முறையாக செயல்படுத்த வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.








