ஜப்பானிய அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் உத்தியோகபூர்வ விஜயமாக ஜப்பானில் உள்ள இலங்கை ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, இன்று (செப்டம்பர் 29) ஜப்பான் பிரதமர் ஷிகெரு இஷிபாவை சந்தித்து உயர் மட்டக் கலந்துரையாடலில் ஈடுபட்டார்.
ஜப்பான் பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பின் போது, இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதாரம், முதலீடு, அபிவிருத்தி ஒத்துழைப்பு மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட முக்கிய துறைகள் தொடர்பாக விரிவான கலந்துரையாடல் நடைபெற்றது.
இந்த சந்திப்பில், வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், ஜனாதிபதியின் டிஜிட்டல் பொருளாதார ஆலோசகர் கலாநிதி ஹான்ஸ் விஜயசூரிய, மற்றும் சிரேஷ்ட பொருளாதார ஆலோசகர் துமிந்த ஹுலங்கமுவ உள்ளிட்ட இலங்கை அரசாங்கத்தின் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.
இந்த சந்திப்பின் போது, இலங்கை கடற்படைக்கு 500 மில்லியன் யென் மதிப்பிலான 10 கண்காணிப்பு ஆளில்லா விமானங்களை (drones) வழங்க ஜப்பான் சம்மதித்துள்ளது. இது, ஜப்பானின் உத்தியோகபூர்வ பாதுகாப்பு உதவித் திட்டத்தின் கீழ் இலங்கைக்கு வழங்கப்படும் முதல் பாதுகாப்பு உபகரண உதவியாகக் கருதப்படுகிறது.
மேலும், சிறிய பால் பண்ணையாளர்களின் உற்பத்தி திறனை மேம்படுத்தும் திட்டத்தில் இரு நாடுகளும் கையெழுத்திட்டுள்ளன. இந்த ஒத்துழைப்பின் கீழ், பாலை பதப்படுத்தும் உபகரணங்கள் மற்றும் உற்பத்தி வசதிகளுக்காக 463 மில்லியன் யென் மானிய உதவி ஜப்பான் அரசால் வழங்கப்படுகிறது.
இச் சந்திப்புக்குப் பிறகு இடம்பெற்ற கூட்டு ஊடக சந்திப்பில், ஜப்பான் பிரதமர் ஷிகெரு இஷிபா, “இந்தியப் பெருங்கடலில் மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் அமைந்துள்ள இலங்கையின் ஸ்திரத்தன்மையும் அபிவிருத்தியும் மிக முக்கியமானவை” என வலியுறுத்தினார்.
அதனைத் தொடர்ந்து உரையாற்றிய ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, அமைதியான மற்றும் நிலையான இந்தோ-பசுபிக் பிராந்தியத்தை உருவாக்குவதற்கான தமது உறுதிப்பாட்டை வலியுறுத்தினார்.








