ஜெருசலேமின் புறநகர்ப் பகுதியான ராமோட்டின் வடக்கில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது 6 பேர் கொல்லப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
நெரிசலான பேருந்து நிறுத்தத்தை குறிவைத்து இரண்டு துப்பாக்கிதாரிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். பின்னர் பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் தாக்குதலாளர்கள் இருவரும் உயிரிழந்ததாக இஸ்ரேலிய காவல்துறை அறிவித்துள்ளது.
சம்பவத்தில் 30 முதல் 50 வயதுக்குட்பட்டவர்களே உயிரிழந்துள்ளதாகவும், காயமடைந்த ஒன்பது பேர் அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. கூடுதலாக, பேருந்தின் கண்ணாடி உடைந்ததில் மூன்று பேர் சிறிய காயமடைந்துள்ளனர்.
இந்த தாக்குதலுக்குப் பொறுப்பேற்க எந்த ஆயுதக்குழுவும் இதுவரை முன்வரவில்லை. சம்பவம் நடந்த சில நிமிடங்களிலேயே இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு சம்பவ இடத்திற்கு சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போது பாதுகாப்புப் படையினர் சம்பவ இடத்தை முற்றுகையிட்டு விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.








