பல் அறுவை சிகிச்சை பட்டதாரிகள் 86 பேருக்கு இன்டர்ன்ஷிப் பயிற்சிக்கான நியமனக் கடிதங்கள் இன்று (08) கொழும்பில் உள்ள ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸவின் தலைமையில் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் பேசிய அமைச்சர், நாட்டின் சுகாதார சேவையை உலகளாவிய தரத்தில் உயர்த்துவதற்காக மனிதவள மேம்பாடு முக்கிய காரணியாக இருக்கும் என வலியுறுத்தினார். பல் மருத்துவத் துறையில் கல்வி மற்றும் மருத்துவத் திறனை மேம்படுத்தும் நோக்கில், பட்டதாரிகள் சிறப்பு மருத்துவர்களின் கீழ் பயிற்சி பெறுவார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.
மேலும், 2019 முதல் பல் அறுவை சிகிச்சை பட்டதாரிகள் பயிற்சியில் இணைக்கப்பட்டுள்ளதாகவும், பயிற்சியை நிறைவு செய்பவர்களுக்கு உடனடியாக நியமனங்கள் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.
நாட்டின் ஆரம்ப மற்றும் வாய்சார் சுகாதார சேவைகளை உலகளாவிய தரத்துக்கு ஏற்ப மறுபரிசீலனை செய்து, மக்களுக்கு நெருக்கமாக கொண்டு செல்லும் திட்டங்கள் செயல்படுத்தப்படும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
இந்நிகழ்வில் சுகாதார அமைச்சின் உயர் அதிகாரிகள், பல் மருத்துவ பீடத்தின் பேராசிரியர்கள் மற்றும் பல் மருத்துவமனைகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.






