சட்டவிரோதமாக துப்பாக்கி வைத்திருந்தமை மற்றும் போலி தகவல் வழங்கியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளில் ஜனாதிபதி ஜோ பைடனின் மகன் ஹன்டர் பைடனை குற்றவாளியாக அமெரிக்க நீதிமன்றம் அறிவித்தது.
ஜனாதிபதி பைடன் தன்னுடைய அதிகாரத்தைப் பயன்படுத்தி மகனை விடுவித்து விடுவாரா? என்ற கேள்வி எழுந்த நிலையில், அவருக்கு பைடன் பொது மன்னிப்பு வழங்க மாட்டார் என்று வெள்ளை மாளிகை கூறியிருந்தது.
இந்தநிலையில், தனது மகன் ஹன்டர் பைடனுக்கு பொது மன்னிப்பு கொடுக்கும் ஆவணங்களில் ஜனாதிபதி பைடன் கையெழுத்திட்டுள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள பைடன்,
இன்று எனது மகன் ஹன்டர் பைடனுக்கு பொது மன்னிப்பு வழங்கும் ஆவணத்தில் கையெழுத்திட்டுள்ளேன். நான் ஜனாதிபதியாகப் பொறுப்பேற்றது முதல் நீதித்துறையில் தலையிட மாட்டேன் என்று கூறியபடி இருந்து வருகிறேன். வீண் பழி சுமத்தி என் மகனை சிறையில் அடைத்த போதும், நான் தலையிடவில்லை. அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே, என் மகனுக்கு அநீதி இழைக்கப்பட்டது. நான் தற்போது அவருக்கு பொது மன்னிப்பு வழங்கியுள்ளேன் எனக் கூறியுள்ளார்.
நடைபெற்று முடிந்த அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் பைடனின் கட்சி தோல்வியடைந்தது.
ஜனாதிபதி பைடன் ஜனவரி 14ஆம் திகதி வரையில் மட்டுமே ஜனாதிபதியாக இருக்க முடியும் என்ற சூழலில், தனது மகனுக்கு அதிகாரத்தைப் பயன்படுத்தி பொது மன்னிப்பு வழங்கியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.








