சர்ச்சைக்குரிய தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் மஹரகமவில் உள்ள தேசிய கல்வி நிறுவகத்தின் (NIE) திட்டமிடல் பிரிவின் பணிப்பாளர் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் (CID) கைது செய்யப்பட்டுள்ளார்.
பரீட்சை தொடர்பான முறைகேடுகள், வினாத்தாள் கசிவு உள்ளிட்டவை தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளை அடுத்தே இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை செப்டம்பர் 15ஆம் திகதி நடைபெற்றது.
எனினும் புலமைப்பரிசில் பரீட்சையின் முதலாம் தாளில் உள்ள சில வினாக்களை ஒத்த வினாக்களுடன் கூடிய பயிற்சிப் பத்திரம் பரீட்சைக்கு முன்னதாக அலவ்வ பிரதேசத்தில் உள்ள டியூஷன் ஆசிரியர் ஒருவரால் பரப்பப்பட்டது.
இது தொடர்பாக பல்வேறு தரப்பினரும் முறைப்பாடு செய்ததையடுத்து பரீட்சைகள் திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
இதன்படி வினாத்தாளை தயாரித்த நிபுணர்கள் குழுவின் இணக்கப்பாட்டுடன் தொடர்புடைய 03 வினாக்களை நீக்கி இறுதி புள்ளிகளை வழங்க பரீட்சை திணைக்களம் தீர்மானித்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.








