பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தனது நற்பெயருக்கு ஏற்பட்ட சேதத்திற்காக 1,000 மில்லியன் ரூபா நட்டஈடு கோரி குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகள் இருவருக்கு எதிராக கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.

இந்த வழக்கில் இன்று (12.08) பிரதிவாதிகளாக குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் அதிகாரி எரங்க ரம்புக்வெல்ல, சிரேஷ்ட  அதிகாரி சுஜீவ ரத்நாயக்க மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

2015 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 23 ஆம் திகதி வெளிநாடுகளில் நடைபெறவிருந்த மாநாடுகளில் பங்கேற்பதற்காக டுபாய் செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக குறித்த மனுவின் மூலம் பாராளுமன்ற உறுப்பினர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன்போது,  வெளிநாடு செல்வதற்காக இராஜதந்திர கடவுச்சீட்டை வழங்கியதாகவும், அங்குள்ள குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகள் அதை சரிபார்த்து அது செயலற்ற கடவுச்சீட்டு என அறிவித்ததாகவும் முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளார்.

பின்னர், குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் எவ்வித நியாயமான காரணமும் இன்றி கைது செய்யப்பட்டு நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதனால் தனது நற்பெயருக்கு களங்கம் விளைவித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி, நியாயமான விசாரணை நடத்தாமல், தீங்கிழைக்கும் வகையில்  கைது செய்து, வழக்குப்பதிவு செய்ததன் மூலம் தனது நற்பெயருக்கு ஏற்பட்ட களங்கத்திற்காக பிரதிவாதிகளிடமிருந்து 1,000 மில்லியன் ரூபா நட்டஈடு கோரி பாராளுமன்ற உறுப்பினர் இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here