அண்மைய புலனாய்வு அறிக்கைகளை அடுத்து பிரஜைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அரசாங்கம் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளதாக ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க மக்களுக்கு உறுதியளித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த ஜனாதிபதி,
“உளவுத்துறை தகவல் தொடர்பில் நாங்கள் ஊடகவியலாளர் மாநாடுகளை நடத்துவதில்லை. நாங்கள் உடனடியாகச் செயல்பட்டு சிலரைக் கைது செய்தோம். இது செய்தியாக வரவில்லை என்றாலும், அனைவரின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.
இரண்டு வாரங்களுக்கு முன்னர் புலனாய்வுத் தகவல் கிடைத்தவுடன் அதிகாரிகள் உடனடியாகச் செயற்பட்டு, இந்தத் தகவல் தொடர்பில் பல நபர்களை கைது செய்துள்ளதாக அவர் வலியுறுத்தினார். சாத்தியமான அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் தடுக்கும் நோக்கில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
“எந்தவிதமான சம்பவங்களும் நடக்காமல் பார்த்துக் கொள்வது எங்கள் பொறுப்பு, இரண்டு வாரங்களுக்கு முன்னர் எங்களுக்கு தகவல் கிடைத்ததும், நாங்கள் அதைச் செய்தோம்,” என்று ஜனாதிபதி திஸாநாயக்க கூறியுள்ளார்.








