நாடு முழுவதும் கைத்தொழில்களுக்கு ஏற்ற 50,000 ஏக்கர் காணியை ஒதுக்கத் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாகக் கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் லக்மாலி ஹேமச்சந்திர தலைமையில் அண்மையில் பாராளுமன்றத்தில் நடைபெற்ற பொருளாதார அபிவிருத்தி மற்றும் சர்வதேச உறவுகள் குறித்த துறைசார் மேற்பார்வைக் குழுவின் கூட்டத்தின் போது இத்திட்டம் வெளிப்படுத்தப்பட்டது.

 இது தொடர்பாக எடுக்கக்கூடிய நடவடிக்கைகள் மற்றும் எதிர்காலத் திட்டம் குறித்துக் காணி மறுசீரமைப்பு ஆணைக்குழு, நகர அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி அதிகாரசபை ஆகியவற்றைக் கலந்தாலோசித்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று குழு பரிந்துரைத்தது.

தற்போதுள்ள நடைமுறைகளின்படி முதலீட்டாளர்களுக்குக் காணி ஒதுக்கீடு செய்வது உட்படப் பல சிக்கல்கள் நீண்ட காலமாக நீடிப்பதாகவும், புதிய தொழில்துறைக்குக் காணி ஒதுக்கீடு செய்யும் செயல்முறை நான்கு ஆண்டுகளுக்கு மேல் ஆகலாம் என்றும் கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் சுட்டிக்காட்டினார்.

சர்வதேச கருத்துக்களின்படி, பொதுவாக ஒரு நாட்டின் நிலப்பரப்பில் 3 வீதம் கைத்தொழில்களுக்காக ஒதுக்கப்பட வேண்டும் என்றும் இலங்கையில் இந்த எண்ணிக்கை 0.01 வீதமாக மட்டுமே காணப்படுகிறது என்றும் செயலாளர் கூறினார்.

கடந்த காலங்களில், தேசிய திட்டத்தின்படி தொழில்களுக்குக் காணி ஒதுக்கப்படவில்லை, மாறாக அரசியல் அல்லது ஏனைய காரணங்களால் பல்வேறு பிரச்சனைக்குரிய சூழ்நிலைகள் ஏற்பட்டன என்பதும் விவாதிக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here