இந்த முறை பாதீட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிதியை வினைத்திறனாகவும், பயனுள்ள மற்றும் நியாயமான முறையிலும் பயன்படுத்துவது அரச அதிகாரிகளின் பொறுப்பாகும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
அமைச்சுக்களின் செயலாளர்களுடன் ஜனாதிபதி செயலகத்தில் நேற்று நடைபெற்ற சந்திப்பிலேயே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
செலவு முகாமைத்துவத்தின் போது அரச அதிகாரிகள் உரிய பொறுப்புடன் செயலாற்ற வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி இதன்போது வலியுறுத்தியதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
அரச சேவைகள் தொடர்பில் மக்கள் மத்தியில் நல்லதொரு எண்ணம் காணப்படவில்லையெனச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அரச சேவைக்குள் காணப்படும் வினைத்திறன் இன்மையே அதற்குக் காரணமெனவும் குறிப்பிட்டுள்ளார்.
அதேபோன்று அரச ஊழியர்களிடையே காணப்படும் திருப்தியின்மையே வினைத்திறன் இல்லாமைக்குக் காரணமாக அமைந்துள்ளதெனவும், அந்த பிரச்சினைகளைத் தீர்த்து அரச சேவையின் வினைத்திறனை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
செலவுகளைக் குறைப்பதற்காக அரச அலுவலகங்கள் அனைத்தையும் அரசாங்க கட்டடங்களுக்குக் கொண்டு வருதல், அதிக பராமரிப்புச் செலவுடன் கூடிய வாகனங்களை மார்ச் மாதமளவில் ஏல விற்பனை செய்யும் திட்டம், பாவனை செய்யாத அலுவலக உபகரணங்களை ஒதுக்குதல், மூடப்பட வேண்டிய நிறுவனங்கள், ஒருங்கிணைக்கப்பட வேண்டிய நிறுவனங்கள் மற்றும் அரச, தனியார் கூட்டிணைவுக்கு வழங்க வேண்டிய நிறுவனங்களை அறிந்துகொண்டு அதற்காக மேற்கொள்ள வேண்டிய துரித நடவடிக்கைகள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.







