பொகவந்தலாவ பொகவானை தோட்டப் பகுதியில் உள்ள வீட்டொன்றில், 13 வயது சிறுமி தொட்டிலில் தொங்கிய நிலையில் உயிரிழந்துள்ளார்.
இந்த துயரச் சம்பவம் நேற்று (14) மாலை 5.45 மணியளவில் இடம்பெற்றதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தகவலின்படி, சிறுமியின் உறவினர்கள் வீட்டிற்கு வந்திருந்தபோது, அவர்கள் குழந்தைக்காக கட்டப்பட்ட தொட்டிலில் சிறுமி விளையாடிக் கொண்டிருந்தார். சில நிமிடங்களுக்குப் பிறகு, அதே தொட்டிலில் தொங்கிய நிலையில் சிறுமி காணப்பட்டதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
அவரது சகோதரன் இதை கண்டதும் உடனடியாக அயலவர்களுக்கு தகவல் அளித்தார். பின்னர் அயலவர்கள் சிறுமியை மீட்டெடுத்து பொகவந்தலாவ மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர். ஆனால், சிறுமி உயிரிழந்த நிலையில் மருத்துவமனைக்கு வந்ததாக வைத்தியசாலை பேச்சாளர் உறுதிப்படுத்தினார்.
சம்பவத்தில் உயிரிழந்தவர் பொகவானை தோட்டத்தைச் சேர்ந்த மதுமதன் ஜென்சியா (13) என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் பொகவானை தமிழ் வித்தியாலயத்தில் 7ஆம் தரத்தில் கல்வி கற்று வந்தார்.
பொலிஸார் ஆரம்பத்தில் இதை தொட்டிலின் சாரியால் தூக்கிட்டு தற்கொலை செய்திருக்கலாம் என சந்தேகிக்கின்றனர்.
இச்சம்பவம் தொடர்பாக ஹட்டன் பதில் நீதிவான் புபூது ஜிந்தக தலைமையில் மரண விசாரணை நடத்தப்பட்டு, சிறுமியின் சடலம் டிக்கோயா கிழங்கன் ஆதார வைத்தியசாலைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளைப் பொகவந்தலாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.








