தர்மபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஏ35 பிரதான வீதி, சுண்டிக்குளம் சந்தி, விஸ்வமடு பகுதியில் இருந்து பரந்தன் நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்தவர்கள் சோதனையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.
குறித்த சம்பவமானது நேற்றைய தினம் (15.12.2024) இரவு, பொலிஸ் உத்தியோகத்தர் வீதி சோதனையில் ஈடுபட்ட பொழுது தலை கவசம் அணியாது மோட்டார் சைக்கிளில் பயணித்த மூன்று சந்தேக நபர்களை சோதனை இடுவதற்கு முற்பட்ட பொழுது மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் தமது கையில் இருந்த கண்ணாடி போத்தலினால் பொலிஸ் உத்தியோகத்தரை தாக்கியுள்ளார். தாக்கியதில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் காயமடைந்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக தர்மபுரம் பொலிஸார் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் மூலம் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் இரண்டு மோட்டார் சைக்கிள்களையும் பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.

இச்சம்பவத்தின் போது கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மற்றும் தடையப் பொருட்கள் அனைத்தும் இன்றைய தினம் (16.12.2024) கிளிநொச்சி நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தர்மபுர பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டி எம் சதுரங்க தெரிவித்துள்ளார்.

[கிளிநொச்சி நிருபர் – ஆனந்தன்]








