போதைப்பொருள் கொள்கலன்கள் தொடர்பான உண்மைகளை மூடிமறைப்பதற்காக, பொதுஜன பெரமுன மீது அரசாங்கம் குற்றச்சாட்டுகளை சுமத்தி வருவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

“நாம் திட்டமிட்ட குற்றச்செயற்பாடுகளை ஒழிக்க வேண்டும் என கூறுகிறோம். ஆனால் அரசாங்கம் இந்த விடயத்தில் அரசியல் இலாபம் பெற முயல்கிறது. கொள்கலன்கள் குறித்து பேசப்படுகிறது. அவை துறைமுகத்தில் சோதனைக்குப் பின் விடுவிக்கப்பட்டுள்ளன. ஆனால் குற்றத்தை எங்கள்மீது திருப்புகிறது,” என அவர் குறிப்பிட்டார்.

அதேவேளை, வெளிநாட்டு புலனாய்வு அமைப்புகள், அதிலும் இந்திய அமைப்பொன்று உட்பட, இந்த கொள்கலன்கள் தொடர்பான தகவல்களை முன்னதாகவே வழங்கியிருந்ததாகவும், சோதனைகள் செய்யப்பட்ட பின்னும் கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டிருப்பது அரசாங்கத்தின் பொறுப்பாக இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

“சுங்கத்தையும் காவல்துறையையும், குற்றக்குழுக்களையும் ராஜபக்ஷக்களே கட்டுப்படுத்துவதாக அரசாங்கம் கூறுகிறது.

அப்படியானால் ஆட்சியில் உள்ள அரசாங்கம் என்ன செய்கிறது? துறைமுகத்திலிருந்து விடுவிக்கப்பட்ட 323 கொள்கலன்கள் எங்கே சென்றன என்பது அரசாங்கத்திற்குத் தெரியும். இருந்தும் குற்றச்சாட்டை எங்கள்மீது தள்ளுகிறது,” என நாமல் ராஜபக்ஷ கேள்வி எழுப்பினார்.

அதேநேரம், அரசாங்கம் தெரிந்தே கொள்கலன்களை விடுவித்து, பிரச்சினைகள் எழும்போது அரச அதிகாரிகளை பலிகடாவாக்குவதாகவும் அவர் குற்றம்சாட்டினார். “இந்த விடயத்தில் அரசாங்கம் அரசியல் செய்யாமல் பக்கசார்பின்றி விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும்,” என அவர் வலியுறுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here