சர்வதேச நாணய நிதியம் அத்தியாவசியமானது எனவும் சஜித் மற்றும் அநுர கூறுவது போன்று அந்த உடன்படிக்கைகளை மாற்றுவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
சஜித் மற்றும் அநுரவின் ஆலோசனைகளுக்கு சர்வதேச நாணய நிதியத்தின் அங்கீகாரம் இல்லையெனவும், அரசாங்கம் ஏற்கனவே ஆரம்பித்துள்ள வேலைத்திட்டத்திற்கே ஆதரவு உள்ளது என்றும் தெரிவித்த ஜனாதிபதி, “IMF வேலைத்திட்டத்தில் இலங்கை அடைந்துள்ள சாதனைகளைப் பாதுகாத்து முன்னேறுவது முக்கியம்” என அதன் தொடர்பாடல் பணிப்பாளர் ஜூலி கொசெக் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார் என்றும் தெரிவித்திருந்தார்.
ஹொரணை பொது விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை (15.09) பிற்பகல் இடம்பெற்ற “ரணிலால் இயலும்” வெற்றிப் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.
சர்வதேச நாணய நிதியம் இல்லாமல், எங்களுக்கு உதவ வேறு யாரும் இல்லை. சர்வதேச நாணய நிதியத்தின் காரணமாக எங்களுக்கு 18 நாடுகளின் ஆதரவு கிடைத்தது. மேலும், நாம் செலுத்த வேண்டிய கடனுக்கான வட்டியை செலுத்துவதில் 10 பில்லியன் டொலர்கள் நன்மையைப் பெறுகிறோம்.
ஏற்றுமதி வருமானத்தை விட நமது இறக்குமதி செலவு அதிகம். எனவே, நாட்டின் பொருளாதாரம் வலுவாக இருக்க, ஏற்றுமதி பொருளாதாரத்திற்குச் செல்ல வேண்டும். பொருளாதாரத்தை நவீனமயமாக்குவதன் மூலம் நாம் முன்னேற வேண்டும். நிவாரணங்களை வழங்குவதன் மூலம் ஒரு நாட்டை முன்னேற்ற முடியாது.
மக்கள் தங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்திற்காக கஷ்டப்படுகிறார்கள். அந்த பிள்ளைகளுக்காக சிறந்த நாட்டை உருவாக்க வேண்டும்.. அவ்வாறு வழங்குவது சாத்தியமில்லை. சிலர் வாக்குகளைப் பெறுவதற்காக மக்களை ஏமாற்றுகிறார்கள்.
இம்முறை சுயேட்சை வேட்பாளராக உங்கள் முன்வந்துள்ளேன். ஐ.தே.கவின் வெற்றிக்காக பங்காற்றியவர்களில் நான் மட்டும் தான் எஞ்சியுள்ளேன். எனவே கட்சியை பாதுகாக்கும் பொறுப்பு எனக்குள்ளது. சஜித்தை அரசியலுக்கு கொண்டு வந்தது நான் தான். பிரேமாஸ அல்ல. அவருக்கு அமைச்சுப் பதவி வழங்கியதும் நான் தான். நாம் அனைவரும் நாட்டுக்காக ஒன்றுபட்டுள்ளோம். எனவே ஐ.தே.க ஆதரவாளர்கள் எம்முடன் இணைய வேண்டும்.
“அடுத்த ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான முடிவை இலங்கை மக்களே எடுக்க வேண்டும். இலங்கை தனது வரலாற்றில் சந்தித்த மிக மோசமான நெருக்கடியிலிருந்து முழுமையாக மீள்வதற்கு இந்த வேலைத்திட்டத்தின் மூலம் பெற்ற வெற்றியை பாதுகாப்பது மிகவும் முக்கியமானது” என சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளது.
எனவே, நாட்டின் பொருளாதாரத்தையும், உங்கள் எதிர்காலத்தையும் காக்க, கேஸ் சிலிண்டருக்கு செப்டம்பர் 21 ஆம் திகதி வாக்களிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்” எனவும் ஜனாதிபதி தெரிவித்திருந்தார்.

இராஜாங்க அமைச்சர் அனுப பஸ்குவல்:
பிரதமர் தினேஷ் குணவர்தனவின் தலையீட்டின் ஊடாக 40 வருடங்களாக களுத்தறை பிரதேசத்தில் காணப்பட்ட நன்னீரில் உப்புநீர் கலக்கும் பிரச்சினைக்கு நாம் தீர்வை வழங்கினோம். இங்கு உள்ள கிதுல் கைத்தொழிலை மேம்படுத்தவும், உப்பு நீர் காரணமாக விவசாயம் மேற்கொள்ளாது கைவிடப்பட்டுள்ள வயல்களில் மீண்டும் பயிரிடுவதற்கும் அவசியமான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொருளாதார நெருக்கடியின் போதும் ஜனாதிபதி 24 இலட்சம் குடும்பங்களுக்கு “அஸ்வெசும“ நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுத்தார்.
“உறுமய” வேலைத்திட்டத்தின் ஊடாக 20 இலட்சம் பேருக்கு வழங்கியவர் எமது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க. அதுபோல் பெருந்தோட்ட மக்களுக்கும் காணி உரிமை வழங்கவும், லைன் அறைகளுக்குப் பதிலாக கிராமங்களை உருவாக்கவும் நடவடிக்கை எடுத்தார்.
அதேபோன்று, முன்பள்ளி ஆசிரியர்களுக்கான கொடுப்பனவுகள் தொடர்பிலும் அவர் அவதானம் செலுத்தியுள்ளார் என தெரிவித்துள்ளார்.
முன்னாள் அமைச்சர் வைத்தியர் ராஜித சேனாரத்ன:
அன்று முடியாது என்றவர்கள் இன்று பதவி வேண்டும் என்கின்றனர்.எமது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஏச்சுப்பேச்சுகளைக் கேட்டுக்கொண்டும் துன்பங்களை தாங்கிக்கொண்டும் இந்நாட்டைப் பொறுப்பெற்று நெருக்கடியில் இருந்து மீட்டெடுத்துள்ளார். யாரும் முடியாது என்று ஓடிய நேரம் எம்மை மீட்டெடுத்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு இன்னும் 05 வருடங்களுக்கு பொறுப்பை வழங்கினால் மாத்திரமே இதனை முழுமையாக முன்னேற்ற முடியும்.
இராஜாங்க அமைச்சர் பியல் நிசாந்த:
மக்கள் விடுதலை முன்னணி கடந்த காலத்தில் செய்தவைகளை இந்த நாடு மறந்திருக்கும் என்று எதிர்பார்க்க வேண்டாம். நாங்கள் மரணித்து விட்டு மீண்டும் பிறக்கவில்லை. 1971 முதல் 1988, 89 முதல் கடந்த போராட்ட காலத்தின்போதும் அவர்களின் உண்மையான நிலையை நாங்கள் கண்டுகொண்டோம்.
அன்று எவ்வாறு டிரான்ஸ்போமர்களை வெடிக்க வைத்தார்கள். விவசாய மையங்களுக்கு எவ்வாறு தீ வைத்தார்கள், அன்று எவ்வாறு இ.போ.சபைக்கு சொந்தான பஸ்களை எரித்தார்கள். அரச சொத்துக்களை எரித்து சாம்பலாக்கியது எவ்வாறு என்பது எமக்கு நினைவிருக்கிறது. எமது ஊரில் இருந்த அதிபர்களை எவ்வாறு கொலை செய்தார்கள் என்றும் எமக்குத் தெரியும்.
இராணுவ வீரர்கள் மற்றும் கிராம உத்தியோகத்தர்களின் வீடுகளுக்குச் சென்று, அவர்களின் பிள்ளைகள் தங்களின் தந்தையைக் கொலை செய்ய வேண்டாம் என்று கதறும்போதும் தலைக்கு துப்பாக்கிச்சூடு நடத்திக் கொலை செய்த விதத்தை நாங்கள் மறக்கவில்லை. நாங்கள் மறந்து விட்டோம் என்று நினைத்தால், அது தவறு என்று அவர்களுக்குக் கூறிக்கொள்ள விரும்புகிறேன்.
எனவே எமது ஜாதிபதியே மீண்டும் வெல்ல வேண்டுமென தெரிவித்தார்.
முன்னாள் பிரதி அமைச்சர் பிரியங்கனீ அபேவீர:
வீழ்ச்சியடைந்த நிலையில் இருந்த இந்த நாட்டின் 50% வீதமான பிரச்சினைகளுக்கு இரண்டு வருடங்களில் தீர்வு வழங்கிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, எஞ்சியுள்ள பணிகளை நிறைவு செய்யவே இந்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுகிறார். ரணில் விக்ரமசிங்கவுக்காகவே நான் இந்த மேடைக்கு வந்தேன்.
அவரை மீண்டும் ஜனாதிபதி பதவிக்கு தெரிவு செய்து, எதிர்கால சந்ததியினருக்கு அபிவிருத்தியடைந்த நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான வாய்ப்பை வழங்குவதே எமது கடமையும் பொறுப்புமாகும்” என்று தெரிவித்திருந்தார்.








