எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலின் போது இம்முறை மன்னார் மாவட்டத்தில் 90 ஆயிரத்து 607 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதாக மன்னார் மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகர் கனக சபாபதி கனகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

மன்னார் மாவட்டச் செயலகத்தில் இன்று(16) மதியம் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,,

எதிர்வரும் 21ஆம் திகதி இடம் பெற உள்ள ஜனாதிபதி தேர்தலின் போது வன்னி தேர்தல் தொகுதி மன்னார் மாவட்டத்தில் தேர்தல் நடவடிக்கைகளுக்கான சகல ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மன்னார் மாவட்டத்தில் 90 ஆயிரத்து 607 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

மன்னார் மாவட்டத்தில் 98 வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிப்பு இடம் பெற உள்ளது.

எமது நிர்வாக தேவை கருதி குறித்த 98 வாக்களிப்பு நிலையங்களும் 25 வலயங்களாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு வலயமும் உதவி தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர் ஊடாக குறித்த 98 வாக்களிப்பு நிலையங்களும் மேற்பார்வையின் கீழ் செயல்படும்.

மாவட்ட வாக்கு எண்ணும் நிலையமாக மன்னார் மாவட்டச் செயலகம் தெரிவு செய்யப்பட்டுள்ளது.

அதற்குள் 7 வாக்கு எண்ணும் நிலையங்கள் ஸ்தாபிக்கப்படும். அதனூடாக மாவட்டத்தின் வாக்கு எண்ணும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.

ஜனாதிபதி தேர்தலை சிறப்பான முறையில் நடத்துவதற்கு பொது மக்களை  தெளிவு படுத்தும் வகையில் ஒலி பெருக்கி  மூலம்  கிராமங்கள் ஊடாக தெளிவுபடுத்தப்பட்டு வருகிறது.

மேலும் வாக்களிக்க தேர்தல் திணைக்களத்தினால் அனுமதிக்கப்பட்ட அடையாள அட்டை இல்லாதவர்களுக்கு விசேட தற்காலிக அடையாள அட்டை வழங்குவதற்கான பணிகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

வாக்களிக்க உள்ள விசேட தேவையுடையவர்களுக்கான ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பான முறையில் இடம் பெற்று  வருகிறது.தேர்தல் குறித்து முறைப்பாடுகள் கிடைக்கும் பட்சத்தில் மன்னார் மாவட்டச் செயலகத்தின் முறைப்பாட்டு பிரிவு இலக்கமான 023-2222215 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தேர்தல் தொடர்பான முறைப்பாடுகளை தெரிவிக்க முடியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார் என எமது பிராந்திய செய்தியாளார் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here