முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மூங்கிலாறு பகுதியில், சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த 84 வயது வயோதிபப் பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த பெண், மூங்கிலாறு பகுதியில் உள்ள வீட்டில் உயிரிழந்த நிலையில் காணப்பட்டதை அறிந்த மக்கள், புதுக்குடியிருப்பு பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த புதுக்குடியிருப்பு பொலிஸார், சடலத்தை மீட்டதுடன், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டனர்.

முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் சம்பவ இடத்திற்கு வருகை தந்து சடலத்தைப் பார்வையிட்ட பின்னர், உடற்கூறு பரிசோதனைக்குப் பின் உடலை உறவினர்களிடம் ஒப்படைக்க உத்தரவிட்டார்.

உயிரிழந்தவர், கஸ்தூரியார் வீதி, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 84 வயதுடைய கோபாலன் குண்டுமணி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இவர், குறித்த காணியை விலைக்கு வாங்கி, சிறு கைத்தொழில் செய்து வந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இது கொலையா அல்லது வேறு காரணங்களால் ஏற்பட்ட உயிரிழப்பா என்பது குறித்து புதுக்குடியிருப்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

குறிப்பிடத்தக்க விடயமாக, இதே மூங்கிலாறு பகுதியில், நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் பாலியல் துன்புறுத்தலுக்குள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட ஒரு இளம்பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட அதே வீட்டிலேயே இந்தச் சம்பவமும் இடம்பெற்றுள்ளது.

மேலும், சில நாட்களுக்கு முன்னர் முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாலைப்பாணி கிராமத்தில், வெட்டுக்காயங்களுடன் மற்றொரு பெண்ணின் சடலம் மீட்கப்பட்டிருந்தது. இவ்வாறான தொடர் சம்பவங்கள் முல்லைத்தீவு மாவட்ட மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here