நாட்டில் இடம்பெற்ற உள்நாட்டுப் போர் நிறைவடைந்து 15 வருடங்கள் கடந்துள்ள போதிலும் தொடர்ந்து பயங்கரவாத தடைச் சட்டம் பயன்படுத்தப்படுவதனால் பல பிரச்சினைகள் உருவாகுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்று முற்பகல் வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தில் இந்த விடயம் தொடர்பான கேள்விகளை எதிர்க்கட்சித் தலைவர் முன்வைத்திருந்தார்.
நாட்டில் காணப்பட்ட குழப்ப நிலைமையை அடுத்து 1979ஆம் ஆண்டு தற்காலிக சட்டமாக பயங்கரவாத தடைச் சட்டம் அமுல்படுத்தப்பட்டது.
எனினும் நாட்டில் சுமார் 30 ஆண்டுகளாக நிலவிய யுத்தம் நிறைவடைந்து 15 வருடங்கள் கடந்துள்ள போதிலும், தொடர்ந்தும் குறித்த சட்டம் அமுலில் உள்ளது.
அரசாங்கத்துக்கு எதிரான கருத்துக்களை முன்வைக்கும் ஊடகத் துறையினர் உள்ளிட்ட சகல தரப்பினருக்கும் எதிராக குறித்த பயங்கரவாத தடைச் சட்டம் பயன்படுத்தப்படுகின்றமை தொடர்பில் அனைவரும் அறிந்துள்ளனர்.
தற்போதைய அரசாங்கத்தின் உறுப்பினர்கள், நாடாளுமன்றத்துக்குள்ளும், அதற்கு வெளியிலும் பயங்கரவாத தடைச் சட்டத்துக்கு எதிரான கருத்துக்களை முன்வைத்துள்ளனர்.
அவ்வாறாயின் குறித்த சட்டத்தை நீக்குதல், புதிய சட்டத்தை கொண்டு வருதல் அல்லது திருத்தத்தை மேற்கொள்ளுதல் தொடர்பில் தற்போதைய அரசாங்கம் உடனடியாக மக்களுக்கு விளக்கமளிக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கோரியிருந்தார்.
இதன்படி, இலங்கையில் பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்ந்தும் பயன்படுத்தப்படுகின்றமை தொடர்பான அரசாங்கத்தின் நிலைப்பாடு, நாட்டில் யுத்தம் நிலவிய காலப்பகுதியிலும் அதற்கு பின்னரும் குறித்த சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட தரப்பினரின் எண்ணிக்கை தொடர்பில் அரசாங்கம் பதிலளிக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தினார்.
அத்துடன், அவர்களில் சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டோரின் எண்ணிக்கை, புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டோரின் எண்ணிக்கை உள்ளிட்ட விடயங்களுக்கும் பதிலளிக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் எதிர்காலத்தில் சர்வதேச மனித உரிமை தரங்களுக்கு அமைய, குறித்த பயங்கரவாத தடைச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்காக அரசாங்கம் அடையாளம் கண்டுள்ள விடயங்கள் தொடர்பிலும் விளக்கமளிக்கப்பட வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் வினவியிருந்தார்.
இதற்குப் பதிலளித்த நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார, பல தரவுகளின் அடிப்படையில் எதிர்க்கட்சித் தலைவரின் கேள்விக்குப் பதிலளிக்க வேண்டியுள்ளமையினால், அதற்கு சிறிது கால அவகாசம் தேவைப்படுவதாகத் தெரிவித்தார்.
குறிப்பாக எதிர்க்கட்சி தலைவரினால் வினவப்பட்டுள்ள கேள்விகளுக்கு அமைய, 1979ஆம் ஆண்டு முதல் சகல தரவுகளையும் ஆராய வேண்டிய தேவைப்பாடு காணப்படுவதாகவும் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார்.








