யாழ்.சாவகச்சேரி நகர வர்த்தகர்களும், பொதுமக்களும் சாவகச்சேரி நகரசபை முன்றலில் இன்று (17.12.2024) போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சாவகச்சேரி நகர சபையால் அண்மையில் கட்டப்பட்ட புதிய கடைகளை குத்தகைக்கு வழங்குவதற்காக பகிரங்கமாக கேள்வி கோரப்பட்டுள்ளது.

கடைகளை கட்ட ஆரம்பிக்கும்போது 2000 ஆம் ஆண்டு யுத்தத்தில் கடைகள் அழிவடைந்த வர்த்தகர்களுக்கு புதிய கடைத் தொகுதியில் முன்னுரிமை வழங்கப்படும் என கடைகள் வழங்கப்படும் என நகர சபையால் உத்தரவாதமளிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், குறித்த வாக்குறுதியை மீறி கேள்வி கோரப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், விண்ணப்பதாரி நகராட்சி மன்ற எல்லைக்குள் வசிக்க வேண்டும் என்ற நிபந்தினையை உள்ளடக்க வேண்டும் எனக்கோரியுமே இந்தப் போராட்டம் இடம்பெற்றுள்ளது.

இதன்போது போராட்டக்காரர்கள் நகரசபையின் பிரதான நுழைவாயிலை பூட்டி போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

இதனையடுத்து அங்கு வந்த சாவகச்சேரி பொலிஸார் பூட்டை உடைத்து அகற்றியதோடு போராட்டகாரர்களை கலைக்க முற்பட்டுள்ளனர்.

இதனால் நுழைவாயிலில் அமர்ந்தவாறு அவர்கள் தமது போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

இத்தருணத்தில் நகரசபை வாகனங்களுக்கு பொறுப்பான அதிகாரி கழிவகற்றும் உழவியந்திரத்தால் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது மோத முயற்சித்ததோடு அதை வீடியோ எடுத்த ஊடகவியலாளரையும் கடுமையாக அச்சுறுத்தியுள்ளார்.

இதனால் அங்கு கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதேவேளை, குறித்த கேள்வி கோரலை இரு வாரங்களுக்கு ஒத்திவைக்குமாறு உள்ளூராட்சி ஆணையாளர் அறிவித்துள்ளார்.

[யாழ் நிருபர்விஜய்குமார் லோஜன்]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here