சாவகச்சேரிப் பகுதியில் ரயிலில் இருந்து இறங்க முற்பட்ட குடும்பப் பெண் ஒருவர் தவறி விழுந்து நேற்று (16) உயிரிழந்தார்.

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற ரயில் சாவகச்சேரி–சங்கத்தானை நிலையத்தை அடைந்தபோது, அந்தப் பெண் இறங்க முயன்றுள்ளார். அவர் இருந்த பெட்டியில் இறங்கும் தளம் இல்லாததால், வேறு பெட்டியின் வழியாக இறங்க முயன்றபோது ரயில் நகரத் தொடங்கியதால் தவறி கீழே விழுந்து படுகாயமடைந்தார்.

படுகாயமடைந்த அவர் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோதும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

பல்கலைக்கழகத்தில் கற்கும் மகனைப் பார்க்கச் சென்று வீடு திரும்பும் வழியிலேயே இத்துயரச் சம்பவம் இடம்பெற்றது. உயிரிழந்தவர் சாவகச்சேரி கோவிற்குடியிருப்பைச் சேர்ந்த 53 வயது பெண்ணாவார். விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரிப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, யாழ்ப்பாணம்–ஊர்காவற்துறை பிரதான வீதியில் நடந்த மற்றொரு விபத்தில் மீன்வியாபாரி ஒருவர் பலியானார்.

அல்லைப்பிட்டியைச் சேர்ந்த மீன்வியாபாரி ஒருவர் மோட்டார் சைக்கிளில் பயணித்தபோது, சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற சொகுசு பேருந்து மோதி, அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இந்த விபத்துக்கான விசாரணைகள் ஊர்காவற்துறை பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here