வடக்கு மாகாணத்தில் சில பாடங்களுக்கு ஆசிரியர்கள் மேலதிகமாக உள்ளதாகத் தரவுகள் காட்டினாலும், நடைமுறையில் பல பாடசாலைகளில் அதே பாடங்களுக்கு ஆசிரியர் வெற்றிடங்கள் நீடிப்பதாக மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.

இந்த நிலைமையை சரிசெய்வதற்கான முழுப்பொறுப்பும் வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கே உண்டு எனவும் அவர் வலியுறுத்தினார்.

இன்று (17.09.2025) ஆளுநர் செயலகத்தில் நடைபெற்ற வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை, இளைஞர் விவகார அமைச்சின் மாதாந்திர கலந்துரையாடலில் அவர் இந்தக் கருத்துகளை வெளியிட்டார்.

ஆளுநர் தனது உரையில், புதிதாக நியமிக்கப்பட்ட இளம் அதிபர்கள் சிறப்பாகச் செயற்படுவதாகவும், அவர்களை ஊக்குவிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

அதேவேளை, வலயக் கல்விப் பணிப்பாளர்கள் அடிக்கடி பாடசாலைகளை பார்வையிட்டு அவற்றின் தேவைகளை அறிந்து செயல்பட வேண்டும் என்றார்.

அரசாங்க நிதியால் செய்யக்கூடிய காரியங்களுக்கே வெளி ஆதரவை நாடும் சில பாடசாலைகளின் செயற்பாடுகள் சந்தேகத்தை உருவாக்குவதாகவும், வெளிப்படைத்தன்மை அவசியம் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும், ஆசிரியர் நியமனங்கள் மற்றும் வெற்றிடங்கள் தொடர்பான தரவுகள் கல்வி அமைச்சின் இணைய தளத்தில் தொடர்ந்து புதுப்பிக்கப்பட வேண்டும் என்றார்.

வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ம. பற்றிக் டிறஞ்சன், ஒரே வலயத்திற்குள் கூட சில பாடசாலைகளில் மேலதிக ஆசிரியர்கள் இருக்க, அருகிலுள்ள பாடசாலைகளில் வெற்றிடங்கள் காணப்படுவதாக சுட்டிக்காட்டினார். இதனை சீரமைக்க வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு பலமுறை அறிவுறுத்தியிருந்தாலும், சில வலயங்களே இதனை நிறைவேற்றியுள்ளதாகவும், மீதமுள்ளவை ஒரு வாரத்திற்குள் செய்து முடிக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

பிரதம செயலாளர் தனுஜா முருகேசன் தனது கருத்துரையில், நிர்வாக நடைமுறைகளை அனைவரும் பின்பற்ற வேண்டும் என்றும், விடுவிக்கப்பட்ட ஆசிரியர்கள் புதிய பணியிடத்தை ஏற்கத் தவறும் பட்சத்தில் உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் கூறினார்.

அதேபோல், ஆசிரியர்களை விதிமுறைக்கு மாறாக தக்கவைத்திருக்கும் அதிபர்களுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றார். ஆசிரியர் ஆளணிச் சீராக்கம் தொடர்பில் தானே நேரடியாக பாடசாலைகளுக்குச் சென்று ஆய்வு மேற்கொள்வேன் எனவும் தெரிவித்தார்.

இந்தக் கலந்துரையாடலில் கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டு திணைக்களப் பணிப்பாளர்கள், வலயக் கல்விப் பணிப்பாளர்கள் மற்றும் தொடர்புடைய உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

(யாழ் நிருபர்-லோஜன் விஜய்குமார்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here