மதுவரியை அதிகரிப்பதனால் மதுபான நிறுவனங்களுக்கே அதிக இலாபம் சென்றடைவதாக மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் மையம் குறிப்பிட்டுள்ளது.
அரசாங்கத்தால் அண்மையில் அதிகரித்த மதுவரி குறித்து அறிக்கையொன்றை வெளியிட்டு, அந்த மையம் இதனைத் தெரிவித்துள்ளது.
மதுபானங்களுக்கான வரியை 6 சதவீதம் அதிகரிப்பதற்கு அரசாங்கம் கடந்த 11ஆம் திகதி தீர்மானித்துள்ளது.
அதன்படி, உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் மதுபானங்களின் விலை திருத்தப்பட்டிருந்தது.
அதேநேரத்தில், சிலோன் புகையிலை நிறுவனமும் சிகரெட்டுகளின் விலையை 11 சதவீதம் அதிகரிக்க நடவடிக்கை எடுத்திருந்தது.
இந்த வரி அதிகரிப்பு செயல்முறையானது உரிய வகையில் மேற்கொள்ளப்படாமையினால், வரி அதிகரிப்பின் பலன்கள் அரசாங்கத்துக்கு அல்லாது மதுபானம் மற்றும் புகையிலை உற்பத்தி நிறுவனங்களையும் விற்பனையாளர்களையும் சென்றடைவதாக மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் மையம் குற்றம்சாட்டுகிறது.
சந்தையில் அதிகமாக விற்பனையாகும் சிகரெட் வகையின் மீதான வரி அதிகரிப்பு 4.51 வீதமாக இருந்தபோதிலும் அதன் விலை 10 ரூபாயினால் அதிகரித்துள்ளதாக அந்த மையம் விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த வரி அதிகரிப்பால் புகையிலை தொழிற்துறையினர் மேலதிக இலாபமாக சுமார் 7 ஆயிரம் மில்லியன் ரூபாய்க்கு அதிக தொகையை ஈட்டுவதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த அதிகரிப்பு ஒவ்வொரு சிகரெட் வகைக்கும் மேற்கொள்ளப்படுவதனால் அந்த நிறுவனங்களின் இலாபம் அதிகரிக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனூடாக அவர்களது விளம்பரத்துக்கு அதிகம் செலவிடுவதற்கான சந்தர்ப்பம் காணப்படுவதாகவும் அதனால் சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் புகையிலை நிறுவனங்களுக்கு இரையாகும் வாய்ப்புகள் அதிகரிப்பதாகவும் மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் மையம் சுட்டிக்காட்டியுள்ளது.
மதுபானம் மற்றும் புகையிலை நிறுவனங்களுக்கும் வர்த்தகர்களுக்கும் அதிக இலாபத்தை வழங்குவதற்குப் பதிலாக, அரசாங்கத்தின் வருவாயை அதிகரிப்பது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும்.
அத்துடன், நாட்டில் போதைப்பொருள் பயன்பாட்டைக் குறைப்பதன் நோக்கமாகக் கொண்டு, முறையான வழிமுறையின்படி மதுவரிகளை அதிகரிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் மையம் வலியுறுத்தியுள்ளது.








